முதியோர் உதவித்தொகை கேட்டு கலெக்டர் காலில் விழுந்து கதறி அழுத மூதாட்டி உடனடியாக வழங்க உத்தரவு

முதியோர் உதவித்தொகை வழங்க கேட்டு தஞ்சை கலெக்டர் காலில் விழுந்து மூதாட்டி கதறி அழுததால் பரபரப்பு ஏற்பட்டது. அவருக்கு உடனடியாக உதவித்தொகை வழங்க உத்தரவு பிறப்பித்தார்.

Update: 2019-10-02 23:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை தெற்குஅலங்கம் ராஜராஜன் வணிக வளாகத்தில் உள்ள காதிகிராப்ட் விற்பனை நிலையத்தில் காந்தி பிறந்தநாளையொட்டி சிறப்பு தள்ளுபடியில் கதர் துணிகள் விற்பனை தொடக்கவிழா நேற்று நடந்தது. இதில் கலெக்டர் அண்ணாதுரை கலந்து கொண்டு சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்கி வைத்தார். பின்னர் அவர், ராஜராஜன் வணிக வளாகத்தை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தபோது, 68 வயதுடைய அம்முலு என்ற மூதாட்டி திடீரென கலெக்டரின் காலில் விழுந்து கதறி அழுததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதை சற்றும் எதிர்பார்க்காத கலெக்டர், உடனே அந்த மூதாட்டியை தூக்கி, என்ன விஷயம் என்று கேட்டார். அதற்கு அந்த மூதாட்டி, நான் தெற்குவீதியில் வசித்து வருகிறேன். எனக்கு கணவர் இல்லை. ஆண் குழந்தையும் இல்லை. வணிக வளாகங் களில் உள்ள கடைகளில் சிறு, சிறு வேலைகளை பார்த்து கொண்டு கடந்த 40 ஆண்டுகளாக பிழைப்பு நடத்தி வருகிறேன். இப்போது வணிக வளாகத்தை இடிக்க போவதாக கூறுவதால் என் நிலைமை என்னவாகும் என தெரிவித்தார்.

முதியோர் உதவித்தொகை

இதை கேட்ட கலெக்டர், வணிக வளாகத்தை இடிக்கமாட்டோம் என தெரிவித்தார். மேலும் அழுதபடியே அந்த மூதாட்டி, எனக்கு முதியோர் உதவித்தொகை இதுவரை வழங்கப்படவில்லை. முதியோர் உதவித்தொகை வழங்கினால் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கூறினார். உடனே அதிகாரிகளை அழைத்து மூதாட்டிக்கு முதியோர் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார்.

இதையடுத்து தாசில்தார் வெங்கடேசன், அந்த மூதாட்டியை அழைத்து விசாரணை நடத்தினர். அவரிடம் உரிய சான்றுகளை பெற்று முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து தஞ்சை தாசில்தார் அலுவலகத்தில் இன்று(வியாழக்கிழமை) மூதாட்டி அம்முலுவுக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை அதிகாரிகள் வழங்குகின்றனர்.

ஏற்கனவே தஞ்சை ஆடக்கார தெருவில் வசித்து வருபவரும், 113 வயதிலும் மிட்டாய் வியாபாரம் செய்து சுயமாக சம்பாதித்து வருபவருமான முகமதுஅபுசாலிக் என்ற முதியவருக்கு முதியோர் உதவித்தொகை வழங்க கலெக்டரால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அதற்கான ஆணை வழங்கப்பட்டது. அவரை தொடர்ந்து 68 வயதான மூதாட்டிக்கும் முதியோர் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்