சட்டசபை தேர்தலில் போட்டி: ஆதித்ய தாக்கரே சிவசேனாவுக்கு நல்ல நாட்களை கொண்டு வருவார் - ஹர்சுல் பதான்

ஆதித்ய தாக்கரே சிவசேனாவுக்கு நல்ல நாட்களை கொண்டுவருவார் என சிவசேனா தலைவரின் உதவியாளர் ஹர்சுல் பதான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Update: 2019-10-02 23:30 GMT
மும்பை,

சிவசேனா கட்சியின் நிறுவன தலைவரான மறைந்த பால்தாக்கரே, ஆட்சியை தீர்மானிக்கும் அளவிற்கு ஆளுமையுடன் விளங்கியபோதும் தேர்தல் களத்தில் ஒருநாளும் போட்டியிட்டதில்லை.

இதேபோல் அவரது மகன் உத்தவ் தாக்கரேவும் தேர்தல் களத்தில் இறங்கியது கிடையாது. ஆனால் முதல் முறையாக சிவசேனா தனது வியூகத்தை மாற்றி அமைத்துள்ளது.

உத்தவ் தாக்கரே தனது மகனும், யுவசேனா தலைவருமான ஆதித்ய தாக்கரேவை முதல் முறையாக வரும் 21-ந் தேதி நடக்கும் சட்டமன்ற தேர்தலில் ஓர்லி தொகுதியில் களம் இறங்கி உள்ளார்.

அதுமட்டும் இன்றி அவர் முதல்-மந்திரி பதவி போட்டியிலும் இருப்பதாக கருதப்படுவதால் இந்த தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.

கட்சியின் இந்த முடிவு குறித்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் நெருங்கிய உதவியாளரான ஹர்சுல் பதான் கூறியதாவது:-

ஆதித்ய தாக்கரே 2009-ம் ஆண்டு கட்சியில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். அன்றில் இருந்து கட்சியில் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.மேலும் பல்வேறு புதிய இளம் தலைவர்களை உருவாக்கி இருக்கிறார்.

கடந்த 10 ஆண்டுகளில் அடிமட்ட சிக்கல்களைப் புரிந்து கொள்வதற்காக அவர் மாநிலம் முழுவதும் பயணம் செய்துள்ளார். இதன் காரணமாகவே தேர்தலில் போட்டியிடாத தனது குடும்பப் பாரம்பரியத்தை உடைக்க அவர் முடிவு செய்துள்ளார்.

அதுமட்டும் இன்றி 30 வயதிற்கு உட்பட்ட நாட்டின் ஒரே தலைவர் இவர் தான் என கூறலாம். மற்ற கட்சிகளில் இளம் தலைவர்கள் என்றால் அவர்களுக்கு குறைந்தது 40 வயதாவது இருக்கும். ஆதித்ய தாக்கரே தற்போது களத்தில் இறங்கியுள்ளதால் சிவசேனா கட்சியின் நல்ல நாட்களை அவர் விரைவில் கொண்டுவருவார் என எதிர்பார்க்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்