பட்டா வழங்க வலியுறுத்தி சுதந்திர பொன்விழா நகர் மக்கள் இடைத்தேர்தலை புறக்கணிக்க முடிவு; பேனர் கட்டியதால் பரபரப்பு

புதுச்சேரி சுதந்திர பொன்விழா நகர் மக்கள் பட்டா வழங்க வலியுறுத்தி இடைத்தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக பேனர் கட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-10-02 22:45 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்கு உள்பட்ட பகுதி சுதந்திர பொன்விழா நகர். இங்கு உயர்ந்த வருவாய் பிரிவினர், நடுத்தர வருவாய் பிரிவினர், குறைந்த வருவாய் பிரிவினர் என 3 பிரிவுகளில் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் புதுச்சேரி வீட்டு வசதி வாரியம் மூலம் கட்டப்பட்டு உள்ளன. மொத்தம் 168 வீடுகள் உள்ளன. இதில் உயர்ந்த வருவாய் பிரிவினர் ஒரு வீட்டை ரூ.34லட்சத்திற்கும், குறைந்த வருவாய் பிரிவினர் ஒரு வீட்டை ரூ.10லட்சத்து 34 ஆயிரத்திற்கும் கடந்த 2009-ம் ஆண்டு வாங்கினர்.

இந்த நிலையில் குறைந்த வருவாய் பிரிவில் உள்ள வீட்டிற்கும், உயர்ந்த வருவாய் பிரிவில் உள்ள வீட்டிற்கும் கூடுதலாக பணம் வேண்டும் அப்போதுதான் பட்டா வழங்கப்படும் என்று வீட்டு வசதி வாரியம் சார்பில் கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே அவர்களுக்கு இன்னும் பட்டா வழங்கப்படவில்லை. மேலும் சுத்தமான குடிநீர் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக அவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் தற்போது காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 21-ந் தேதி நடைபெற உள்ளது. எனவே சுதந்திர பொன்விழா நகர் மக்கள், அரசு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாததால் சட்டமன்ற இடத்தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக ஊரின் நுழைவாயிலில் பேனர் வைத்தனர்.

அதில் ’சுதந்திர பொன்விழா நகரில் கடந்த 10 ஆண்டுகளாக வீட்டு பத்திர பதிவு மற்றும் குடிநீர் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால் நாங்கள் நடைபெற உள்ள காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தேர்தல் துறை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. எனவே அனுமதி இல்லாமல் போராட்டம் தொடர்பான பேனர் வைக்கக்கூடாது. அனுமதி பெற்றுதான் பேனர் வைக்க வேண்டும் என்று கூறினர். அதனை தொடர்ந்து அவர்கள் அந்த பேனரை அகற்றினர். இன்று(வியாழக்கிழமை) தேர்தல் துறையின் அனுமதி பெற்று மீண்டும் பேனரை கட்ட முடிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்