கண்டிப்பாக பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாதீர் - கலெக்டர் வீரராகவராவ் வேண்டுகோள்

ராமேசுவரம் வரும் சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது என்று கடற்கரை தூய்மை செய்யும் நிகழ்ச்சியில் கலெக்டர் வேண்டுகோள் விடுத்தார்.

Update: 2019-10-02 22:30 GMT
ராமேசுவரம்,

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளையொட்டி ராமேசுவரத்தில் நேற்று தூய்மையே சேவை இயக்கத்தின் கீழ் அக்னி தீர்த்த கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்ச்சி மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் கூடுதல் ஆட்சியர் பிரதீப் குமார், மகளிர் திட்ட இயக்குனர் குருநாதன், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கேசவதாசன், பயிற்சி உதவி கலெக்டர் சரவண கண்ணன் மற்றும் நகராட்சி அதிகாரிகள், துப்புரவு பணியாளர்கள் யாத்திரை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

அப்போது கலெக்டர் வீரராகவராவ் பேசியதாவது:-

புண்ணிய தலமான ராமேசுவரத்தில் கால் பதிக்க ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராட வரும் பக்தர்கள் கடலில் துணிகளை போடக்கூடாது. கடல் மற்றும் கடற்கரை பகுதிகளில் எந்தவொரு குப்பைகளையும் வீசக்கூடாது. குறிப்பாக, பிளாஸ்டிக் பைகளை யாரும் பயன்படுத்தக் கூடாது. கடற்கரை பகுதி மற்றும் கோவில் ரத வீதிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களையும் சுத்தமாக வைத்திருக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து அக்னி தீர்த்த கடற்கரை பகுதியில் சுத்தம் செய்யும் நிகழ்ச்சியை கலெக்டர் தொடங்கி வைத்து அனைவருடனும் சேர்ந்து கடற்கரையில் கிடந்த குப்பைகளை சேகரித்து அகற்றினார். நிகழ்ச்சியில் தாசில்தார் அப்துல்ஜபார், யாத்திரை பணியாளர்கள் சங்க தலைவர் பாஸ்கரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


இதே போல் ராமேசுவரத்தில் உள்ள மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியிலும் காந்தியின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பள்ளியில் இருந்து பேரணியை கடற்படை முகாம் கமாண்டர் ஏ.கே.தாஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். செமம்மடம் வரையிலும் விழிப்புணர்வு நடைபயணமாக சென்ற மாணவர்கள் சாலையோரத்தில் கிடந்த குப்பைகளையும் அகற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் வேலுச்சாமி, பள்ளி அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்