பாளையங்கோட்டையில் பரபரப்பு: பிரபல ரவுடியை விரட்டிப் பிடித்த போலீசார் - கத்தி, கஞ்சா பறிமுதல்

பாளையங்கோட்டையில் பிரபல ரவுடியை போலீசார் விரட்டிப்பிடித்தனர். அவரிடம் இருந்து கத்தி, கஞ்சா ஆகியவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2019-10-02 23:00 GMT
நெல்லை, 

பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் தலைமையில் போலீசார் என்.ஜி.ஓ. காலனி பகுதியில் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை போலீசார் மறித்தனர். ஆனால் அந்த கார் நிற்காமல் சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் விரட்டிச் சென்று அந்த காரை மடக்கி பிடித்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் காரில் இருந்தவர் பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளை நகரை சேர்ந்த துரை செல்வம் மகன் ரஞ்சித் என்ற ரஞ்சித்குமார் (வயது 32) மற்றும் அவரது கூட்டாளிகள் என்பது தெரியவந்தது.

அவரது கூட்டாளிகள் அனைவரும் தப்பி ஓடி விட்டனர். ரஞ்சித் போலீசாரை மிரட்டி விட்டு தப்பி ஓட முயன்றார். அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் ஏறி, அங்கு இருந்து கீழே குதித்தார்.

இதில் அவரது தலை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து ரஞ்சித்தை போலீசார் பிடித்தனர். இதையடுத்து அவரை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பிடிபட்ட ரஞ்சித் மீது கொலை, கொலை முயற்சி, ஆட்கடத்தல் மற்றும் கஞ்சா பதுக்கி விற்பனை செய்த வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. அவர் ரவுடி பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

இதுகுறித்து போலீசாரை மிரட்டி தப்பி ஓடியதாக இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித்தை கைது செய்தனர்.

அவரிடம் இருந்து ஒரு கார், ஒரு கத்தி, 2½ கிலோ கஞ்சா ஆகியவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்