நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை: அவலாஞ்சி அணை நிரம்பியது - வினாடிக்கு 450 கனஅடி நீர் வெளியேற்றம்

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக அவலாஞ்சி அணை நிரம்பியது. மேலும் அணையில் இருந்து வினாடிக்கு 450 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Update: 2019-10-03 22:45 GMT
மஞ்சூர்,

நீலகிரி மாவட்டத்தில் குந்தா, அவலாஞ்சி, காட்டு குப்பை, கெத்தை உள்பட 13 நீர்மின் நிலையங்கள் உள்ளன. இந்த நீர்மின் நிலையங்களில் அப்பர் பவானி, அவலாஞ்சி, எமரால்டு, பைக்காரா, போர்த்திமந்து உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட அணைகளில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தினமும் மொத்தம் 833.65 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிறது.

கடந்த 2 மாதங்களாக நீலகிரி மாவட்டம் முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்தது. குறிப்பாக அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டியது. இதனால் மின்சார உற்பத்திக்கு முக்கிய ஆதாரமாக உள்ள அனைத்து அணைகளிலும் நீர்மட்டம் பெருமளவு உயர்ந்தது. இதைத்தொடர்ந்து அப்பர்பவானி, குந்தா, பைக்காரா, கிளன்மார்கன், போர்த்திமந்து ஆகிய அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது. நேற்று முன்தினம் மாலை மஞ்சூர் அருகே உள்ள அவலாஞ்சி அணை தனது முழு கொள்ளளவான 171 அடியை எட்டியது.

இதைத்தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி நேற்று முன்தினம் இரவு 8.15 மணி அளவில் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது. அணையின் 2 மதகுகள் வழியாக வினாடிக்கு 450 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் அவலாஞ்சி அணை திறக்கப்பட்டதால், அதன்மூலம் வெளியேறும் உபரிநீர் தக்கர் பாபா நகர், எடக்காடு பிக்குலிபாலம் வழியாக குந்தா அணையை அடைந்தது. இதன் காரணமாக அந்த அணையும் தனது முழு கொள்ளளவை எட்டியது.

அதனால் நேற்று காலை குந்தா அணையில் இருந்து வினாடிக்கு 250 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. முன்னதாக அணைகள் திறக்கப்படுவதை முன்னிட்டு குந்தா மற்றும் பில்லூர் பகுதி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிவுறுத்தினார். மேலும் தண்டோரா மூலம் எச்சரிக்கையும் விடப்பட்டது. அணைகள் நிரம்பியதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள்.

இதேபோல் குன்னூர் நகராட்சியின் 30 வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீராதாரமாக ரேலியா அணை உள்ளது. இந்த அணை குன்னூரில் இருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பந்துமி என்ற இடத்தில் அமைந்து உள்ளது. இதன் முழு கொள்ளளவு 43.7 அடி ஆகும். தொட்டபெட்டா மலைப்பகுதியில் இருந்து வரும் நீரூற்று அணையின் நீராதாரமாக உள்ளது.

இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக குன்னூர் பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் ரேலியா அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் ரேலியா அணை பகுதியில் 117 மி.மீட்டர் மழை பெய்தது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 41 அடியாக உயர்ந்து உள்ளது.

மேலும் செய்திகள்