புதுக்கோட்டையில் சிக்கிய வடமாநில வாலிபர்கள் 6 பேருக்கு பல்வேறு கொள்ளை சம்பவங்களில் தொடர்பு

புதுக்கோட்டையில் சிக்கிய வடமாநில வாலிபர்கள் 6 பேருக்கு பல்வேறு கொள்ளை சம்பவங்களில் தொடர்பு இருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Update: 2019-10-03 23:15 GMT
திருச்சி,

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் உள்ள லலிதா ஜூவல்லரியில் 30 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் துப்பு துலக்க 7 தனிப்படை அமைக்கப்பட்டது. இது தவிர, அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு லாட்ஜுகள், திருமண மண்டபங்கள், பஸ் நிலையங்கள் உள்பட அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தினார்கள். இந்தநிலையில் புதுக்கோட்டையில் உள்ள ஒரு லாட்ஜில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் சிலர் தங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் புதுக்கோட்டையில் உள்ள குறிப்பிட்ட லாட்ஜுக்கு சென்று அதிரடியாக சோதனை நடத்தினார்கள். அங்கு அறையில் இருந்த 5 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரித்தபோது அவர்கள் அனைவரும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. அந்த அறையில் சோதனையிட்டபோது, 10-க்கும் மேற்பட்ட காலி பைகள் கிடந்தன. அப்போது அறையில் இருந்தவர்களுக்காக உணவு வாங்க வெளியே சென்ற ஒரு வாலிபர் மீண்டும் அறைக்கு திரும்பினார்.

அவர் போலீசாரை கண்டதும் திடீரென தப்பி ஓட முயன்றார். அவரை விரட்டியபோது மாடியில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். விசாரணையில் அவர், அப்ஜுன்ஷேக் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். காயம் அடைந்தவர் உள்பட பிடிபட்ட 6 பேரிடம் விசாரித்தபோது, இவர்களுக்கு பல்வேறு கொள்ளை சம்பவங்களில் தொடர்பு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் அறையில் கண்டெடுக்கப்பட்ட காலி பைகள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர்களை போல் மேலும் சில கொள்ளை கும்பலும் தமிழகத்தில் சதித்திட்டத்துடன் ஊடுருவி இருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவலும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து 5 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்