காவிரி ஆற்றில் இருந்து திருடி குவிக்கப்பட்ட மணல் அகற்றம் பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை

பூம்புகார் அருகே காவிரி ஆற்றில் இருந்து திருடி குவிக்கப்பட்ட மணல் பொதுப்பணித்துறையினர் நடவடிக்கையால் அகற்றப்பட்டது.

Update: 2019-10-03 23:00 GMT
திருவெண்காடு,

பூம்புகார் அருகே ராதாநல்லூர், ஆலங்காடு, கருவிழந்தநாதபுரம், கிடாரங்கொண்டான் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு செல்லும் காவிரி ஆற்றில் சமூகவிரோத கும்பல் இரவு நேரங்களில் மணல் திருட்டில் ஈடுபடுவதாகவும், அவ்வாறு எடுக்கும் மணலை தேக்கு மர காடுகளின் நடுவே குவித்து வைத்து லாரிகள் மூலம் தொடர்ந்து விற்பனை செய்வதாகவும், தொடர்ந்து மணல் எடுப்பதால் மேற்கண்ட பகுதிகளில் காவிரி ஆற்றின் கரைகள் மழை காலத்தில் உடைப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அப்பகுதி பொதுமக்கள் பொதுப்பணித்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

பொக்லின் எந்திரம் மூலம் அகற்றம்

இதனையடுத்து மயிலாடுதுறை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஆசைதம்பி உத்தரவின்பேரில் உதவி செயற்பொறியாளர் செந்தில்குமரன், உதவி பொறியாளர் கனகசரவணசெல்வன், லஸ்கர் பாண்டியன் மற்றும் பணியாளர்கள் மேற்கண்ட காவிரிஆற்றின் கரையோர பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த பகுதிகளில் குவியல், குவியலாக மணல் குவிக்கப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து அங்கு குவிக்கப்பட்ட மணலை பொக்லின் எந்திரங்கள் மூலம் அப்புறப்படுத்தி, காவிரி ஆற்றில் காணப்படும் பள்ளங்களை நிரப்பினர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், காவிரிஆற்றில் இரவு நேரங்களில் மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது போலீஸ் துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். 

மேலும் செய்திகள்