மாமல்லபுரத்தில், அமைச்சர்கள்-அதிகாரிகள் ஆய்வு

சீன அதிபர்-பிரதமர் மோடிக்கு தமிழக அரசின் சார்பில் வரவேற்பு கொடுப்பது குறித்து, மாமல்லபுரத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Update: 2019-10-03 22:45 GMT
மாமல்லபுரம்,

சீன அதிபர் ஜின்பிங், இந்திய பிரதமர் நரேந்திரமோடி ஆகியோர் அரசு முறை பயணமாக மாமல்லபுரம் வருகின்றனர். அங்குள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கும் இவர்கள் இரு நாட்டு வர்த்தகம் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தி முக்கிய கோப்புகளில் கையெழுத்திடுகின்றனர். இங்குள்ள புராதன சின்னங்களையும் கண்டு களிக்கின்றனர்.

இந்தநிலையில் சீன அதிபர்-பிரதமர் மோடிக்கு தமிழக அரசின் சார்பில் வரவேற்பு கொடுப்பது குறித்து மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆகியோர் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா, மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாக அதிகாரி லதா மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தனர். அப்போது மாமல்லபுரம் கடற்கரை கோவில் அருகில் இரு நாட்டு தலைவர்களுக்கும் தமிழக அரசின் சார்பில் வரவேற்பு கொடுப்பது என்றும், தமிழக அரசின் சார்பில் மாமல்லபுரத்தை நினைவுபடுத்தும் வகையில் இருவருக்கும் நினைவு பரிசாக சிற்பங்கள் வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது. நகரை தூய்மையாக வைத்திருப்பது குறித்தும் கலெக்டருடன் அமைச்சர்கள் இருவரும் ஆலோசித்தனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. செல்வம், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் எஸ்.ஆறுமுகம், வாலாஜாபாத் கணேசன், முன்னாள் எம்.பி. மரகதம்குமரவேல், மாமல்லபுரம் புதுநகர் வளர்ச்சிக்குழும உறுப்பினர் கணேசன், முன்னாள் பேரூராட்சி தலைவர் பி.ஏ.எஸ்வந்தராவ், முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் எம்.சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்