அரியலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பாதிப்பை கண்டறிய 5 குழுக்கள் அமைப்பு

அரியலூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை அலுவலகம் சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2019-10-03 22:45 GMT
அரியலூர்,

அரியலூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை அலுவலகம் சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கண்காணிப்பு அதிகாரி சரவணவேல்ராஜ் தலைமை தாங்கினார். கலெக்டர் டி.ஜி.வினய் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கண்காணிப்பு அதிகாரி சரவணவேல்ராஜ் பேசுகையில், வடகிழக்கு பருவமழையின்போது அரியலூர் மாவட்டத்தில் 29 நீர்நிலை பகுதிகளில் பாதிப்பு ஏற்படும் என கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதிகளை கண்காணித்திடவும், அனைத்து கிராம பகுதிகளையும் ஆய்வு செய்திடவும் சப்-கலெக்டர் தலைமையில் பல்துறை அலுவலர்களை கொண்டு 5 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், வெள்ள பாதிப்பு பகுதிகளுக்கு முதலுதவிக்காக 290 ஆண்களும், 110 பெண்களும் மற்றும் கால்நடைகள் முதல் உதவிக்காக 29 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பாம்பு பிடிப்பவர்கள் 28 பேரும், மரம் அறுப்பவர்கள் 97 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். பருவ மழையின் போது பேரிடர் தொடர்பாக பொதுமக்கள் தொடர்பு கொள்ள வசதியாக கலெக்டர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் செயல்படக்கூடிய பேரிடர் கால கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது என்றார். கூட்டத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், வருவாய் அதிகாரி பொற்கொடி, திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) சுந்தர்ராஜன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொறுப்பு) முருகன், தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி (பேரிடர் மேலாண்மை) மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்