கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை கணக்கில் வராத ரூ.1¼ லட்சம் பறிமுதல்

கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி, கணக்கில் வராத ரூ.1¼ லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

Update: 2019-10-03 22:30 GMT
கரூர்,

கரூர் தாந்தோன்றிமலையில் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு நேற்று மாலை 6 மணியளவில் கரூர் லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாமலை தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரூபா, ரேகா, கீதா உள்பட போலீசார் அடங்கிய குழுவினர் திடீரென வந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு வட்டார போக்குவரத்து அதிகாரி சுப்ரமணியன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் இருந்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், அங்கிருந்த பொதுமக்கள் உள்ளிட்டோரை வெளியே செல்லாதபடி அங்கேயே நிற்க வைத்து விசாரித்தனர். அப்போது என்ன தேவைக்காக அந்த அலுவலகத்திற்கு வந்தார்கள்? அவர்களிடம் உள்ள பணம் எவ்வளவு? அதிமாக பணம் வைத்திருந்தவர்கள், அதனை என்ன தேவைக்காக கொண்டு வந்தார்கள்? என்பன உள்ளிட்ட கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் ஒவ்வொருவராக வெளியே அனுப்பி வைத்தனர்.

ரூ.1¼ லட்சம் பறிமுதல்

இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 31 ஆயிரத்து 890-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சோதனையின்போது அனைவரது செல்போன்களையும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைப்பற்றி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இரவு நீண்ட நேரமாக சோதனை நடந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்