தாம்பரம் புதுதாங்கல் ஏரியில் மண் எடுப்பதில் முறைகேடு லாரிகளை சிறைபிடித்து - பொதுமக்கள் தர்ணா போராட்டம்

தாம்பரம் புதுதாங்கல் ஏரியில் மண் எடுப்பதில் முறைகேடு நடப்பதாக கூறி லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-10-03 23:15 GMT
தாம்பரம்,

சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம், முல்லைநகர் பகுதியில் புதுதாங்கல் ஏரி உள்ளது. இந்த ஏரியை ஆழப்படுத்தும் வகையில் ஏரியில் மண் அள்ள பொதுப்பணித்துறையிடம் அனுமதி பெற்ற ஒப்பந்ததாரர், அளவுக்கு அதிகமாக லாரிகளில் மண்ணை அள்ளி முறைகேடில் ஈடுபடுவதாக கூறி நேற்று காலை தாம்பரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா தலைமையில் ஏராளமான தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் ஏரியில் மண் அள்ளிக்கொண்டிருந்த 50-க்கும் மேற்பட்ட லாரிகள் மற்றும் 5 பொக்லைன் எந்திரங்களை சிறைபிடித்தனர்.

அவர்களிடம் முறையான ஆவணங்களை கேட்டனர். ஆனால் ஆவணங்கள் இல்லாமல் மண் ஏற்றிய லாரிகள், ஆங்காங்கே மண்ணை கொட்டிவிட்டு தப்பிக்க முயன்றபோது, அந்த லாரிகளை பொதுமக்கள் மடக்கிப்பிடித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த தாம்பரம் தாசில்தார் சாந்தகுமாரி, எவ்வளவு லாரிகள் மண் அள்ளவேண்டும்?. அதற்கான ஆவணங்கள் இருக்கிறதா? என்று சோதனை செய்யாமல் காலம் தாழ்த்தியதாக தெரிகிறது. உடனே எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ., லாரிகளை ஆய்வு செய்யும்படி தாசில்தாரிடம் கூறினார். இதனால் அவர் அங்கிருந்து வெளியே செல்ல முயன்றதால், ஆத்திரமடைந்த பொதுமக்கள், தாசில்தாரின் வாகனத்தை மறித்து அவரை தடுத்து நிறுத்தினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாம்பரம் போலீஸ் உதவி கமிஷனர் அசோகன் தலைமையில் போலீசார் அங்கு வந்து தி.மு.க. எம்.எல்.ஏ. மற்றும் பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

ஆனால் இதுகுறித்து விசாரிக்க உயர் அதிகாரிகள் இங்கு வரவேண்டும். இல்லை என்றால் இந்த இடத்தைவிட்டு நகர மாட்டோம் எனக்கூறி எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ. உள்பட அனைவரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். காலையில் தொடங்கிய போராட்டம் இரவு வரை நீடித்தது.

நேற்று மாலை அங்கு வந்த ஸ்ரீபெரும்புதூர் தொகுதி தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு ஏரியில் மண்அள்ளும் பகுதியை பார்வையிட்டார். பின்னர் அவரும் தர்ணா போராட்டத்தில் பங்கேற்றார். தாம்பரம் கோட்டாட்சியர் ராஜ்குமார் தலைமையில் வருவாய்த்துறையினர் டி.ஆர்.பாலு எம்.பி. உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதுபற்றி உரிய புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து ஏரியில் முறைகேடாக மணல் அள்ளுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ. வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தார்.

அதனை பெற்றுக்கொண்ட வருவாய்த்துறை அதிகாரிகள், அதன் மீது விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்