போக்குவரத்து விதிமுறை மீறல்: 3,096 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து - கலெக்டர் மெகராஜ் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 3 ஆயிரத்து 96 பேரின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு இருப்பதாக கலெக்டர் மெகராஜ் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2019-10-03 22:45 GMT
நாமக்கல், 

நாமக்கல் மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்கள், குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் இயக்குபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

1.1.2019 முதல் 31.8.2019 வரை, அதாவது கடந்த 8 மாதங்களில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டவர்கள் மீது 1,41,365 மோட்டார் வாகன சிறு வழக்குகள் காவல்துறை மூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதேபோல வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மூலம் பள்ளி வாகனங்கள், ஆட்டோக்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்களில் தணிக்கை செய்யப்பட்டு அபராதமாக ரூ.5 லட்சத்து 69 ஆயிரத்து 900-ம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின்படி செல்போன் பேசிக்கொண்டு வாகனம் இயக்குதல், போக்குவரத்து சிக்னல்களை கடைபிடிக்காமை, உயிர் இழப்பு விபத்துகள், குடிபோதையில் வாகனம் இயக்குதல், அதிகபாரம் ஏற்றுதல் மற்றும் அதிக பயணிகளை ஏற்றுதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல் குற்றங்களுக்காக காவல்துறை மற்றும் போக்குவரத்துறை அலுவலர்களால் 3,096 வாகன ஓட்டுநர்களின் உரிமங்கள் கைப்பற்றப்பட்டு, தற்காலிக ரத்து செய்யப்பட்டுள்ளன.

சாலை வாகன விபத்துகளை குறைப்பதற்கு தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 6 இடங்களில் பலவண்ண ஒளிரும் விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. குற்ற சம்பவங்களை கண்காணிக்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டு உள்ளன.

தற்போது மத்திய அரசின் சட்டப்படி இளம் சிறார்கள் ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனங்களை இயக்கினால் பெற்றோருக்கு சிறை தண்டனையும், மேலும் அச்சிறார்களுக்கு 25 வயது வரை ஓட்டுனர் உரிமம் வழங்க இயலாத நிலை ஏற்படும்.

தலைக்கவசம் அணியாமை, சீட்பெல்ட் அணியாமை, அதிக பார, அதிக பயணிகளை ஏற்றி செல்லுதல் போன்ற குற்றங்களுக்கு வாகன ஓட்டுனர்கள், வாகன உரிமையாளர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் அதிகரிக்கப்பட்டு உள்ளதால், வாகன ஓட்டிகள் அனைவரும் சாலை விதிகளை தவறாது பின்பற்றி வாகனங்களை இயக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்