சேலத்தில், தூய்மையாக பராமரிக்காத வீடுகள், வணிக நிறுவனங்களுக்கு ரூ.12¼ லட்சம் அபராதம்

சேலத்தில் தூய்மையாக பராமரிக்காத வீடுகள், வணிக நிறுவனங்களுக்கு ரூ.12¼ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-10-03 22:00 GMT
சேலம், 

பருவமழை காலத்தினை முன்னிட்டு சேலம் மாநகராட்சி பகுதிகளில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு, தொடர் நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி, சூரமங்கலம், அஸ்தம்பட்டி ஆகிய மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து கோட்டங்களிலும் தீவிர துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

குடியிருப்புகள் மற்றும் வணிக உபயோக கட்டிடங் கள் என மொத்தம் 2 லட்சத்து 23 ஆயிரத்து 344 குடியிருப்புகள் மற்றும் வணிக உபயோக கட்டிடங்களை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் தூய்மையாக பராமரிக்காத 799 குடியிருப்புகள் மற்றும் 578 வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள், பெட்ரோல் விற்பனை நிலையம், மருத்துவமனைகள், திரையரங்குகள் என மொத்தம் 1,317 உரிமையாளர்களிடம் இருந்து ரூ.12 லட்சத்து 24 ஆயிரத்து 610 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

மேலும், மாநகராட்சி பகுதியில் உள்ள குடியிருப்புகள், திரையரங்குகள், மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், தேநீர் விடுதிகள், உணவகங்கள், காலிமனைகள் மற்றும் பணிமனைகள் போன்ற இடங்களில் தொடர்ந்து ஆய்வு பணிகள் மேற்கொள்ள சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த குழுவினரின் திடீர் ஆய்வின்போது பொது சுகாதாரத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் குப்பைகள் மற்றும் தேங்கியுள்ள மழைநீர் போன்றவை அகற்றப்படாமல் தூய்மையாக பராமரிக்காதது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு அபராதம் வசூலிக்கப்படும்.

இந்த தகவலை சேலம் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்