செங்கல்பட்டு அருகே பஸ் மீது ஆம்புலன்ஸ் மோதல்; நெஞ்சுவலிக்கு சிகிச்சைக்கு சென்ற பெண் பலி டிரைவரும் உயிரிழந்த பரிதாபம்

செங்கல்பட்டு அருகே பஸ் மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளானதில், நெஞ்சுவலி சிகிச்சைக்கு சென்ற பெண் மற்றும் டிரைவர் பரிதாபமாக பலியானார்கள்.

Update: 2019-10-05 00:00 GMT
செங்கல்பட்டு,

காஞ்சீபுரத்தை சேர்ந்தவர் கன்னியம்மாள் (வயது 50). இவருக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து, அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதற்காக அவரது உறவினர்கள் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து கன்னியம்மாள் வீட்டுக்கு விரைந்து வந்த ஆம்புலன்சில், கன்னியம்மாளை ஏற்றிக்கொண்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆம்புலன்சை ஜெயக்குமார் (38) என்பவர் ஓட்டி சென்றார். அவருக்கு உதவியாளராக தினகரன் என்பவரும் உடன் சென்றார். செங்கல்பட்டு அருகே ஆத்தூர் பகுதியில் காஞ்சீபுரம்-செங்கல்பட்டு சாலையில் ஆம்புலன்ஸ் வேகமாக வந்த போது, அங்குள்ள வளைவில் வாகனத்தை ஜெயக்குமார் திருப்பினார்.

அப்போது அங்கு முன்னே சென்று கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்றின் மீது ஆம்புலன்ஸ் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில், ஆம்புலன்ஸ் அப்பளம் போல நொறுங்கியது.

அதில் ஆம்புலன்சு டிரைவர் ஜெயக்குமாரும், சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட கன்னியம்மாள் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் இந்த விபத்தில் தினகரன் பலத்த காயத்துடன் ரத்தவெள்ளத்தில் கிடந்தார்.

உடனடியாக அந்த வழியாக வந்தவர்கள், இதுகுறித்து செங்கல்பட்டு டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையறிந்த போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடியபடி கிடந்த தினகரனை மீட்டு அரசு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். விபத்தில் பலியான ஆம்புலன்ஸ் டிரைவர் ஜெயக்குமார் மற்றும் கன்னியம்மாளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்