கரூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு 2 குழந்தைகள் சாவு பொதுமக்கள் அச்சம்

கரூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு 2 குழந்தைகள் பரிதாபமாக இறந்தனர். இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Update: 2019-10-05 23:15 GMT
குளித்தலை,

கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியம், கூடலூர் ஊராட்சிக்குட்பட்ட குண்ணாகவுண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகன் ரித்தீஷ் (வயது 4). இவன் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தான். இதையடுத்து அவனை பெற்றோர் மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் காய்ச்சல் சரியாகவில்லை. இதையடுத்து மேல்சிகிச்சைக்காக ரித்தீஷ் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தான். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் ரித்தீஷ் பரிதாபமாக இறந்தான்.

இதேபோல குளித்தலை அருகேயுள்ள சிவாயம் ஊராட்சிக்குட்பட்ட ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மகள் ரட்திகா சாய் (3). இவளுக்கும் கடந்த சில நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ரட்திகா சாய் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாள். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் ரட்திகா சாய் பரிதாபமாக இறந்தாள்.

பொதுமக்கள் அச்சம்

மர்ம காய்ச்சலுக்கு 2 குழந்தைகள் இறந்த சம்பவம் அப்பகுதிகளில் பொதுமக்களிடேயே அச்சத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தோகைமலை வட்டார மருத்துவ அலுவலர் தியாகராஜன் தலைமையிலான மருத்துவக்குழுவினர், குண்ணாகவுண்டம்பட்டி, ஆதனூர் பகுதிகளில் மருத்துவ முகாம்கள் அமைத்து அப்பகுதியில் வேறு யாருக்காவது காய்ச்சல் ஏற்பட்டுள்ளதா? என பரி சோதனை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்