திருவெள்ளைவாயல்- இலவம்பேடு சாலையில் தொலைக்காட்சி கேமராமேனை தாக்கி செல்போன் பறிப்பு

திருவெள்ளைவாயல்- இலவம்பேடு சாலையில் தனியார் தொலைக்காட்சி கேமராமேனை ஹெல்மெட்டால் தாக்கி செல்போனை பறித்து சென்றனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Update: 2019-10-05 22:45 GMT
மீஞ்சூர்,

சென்னை ஆலப்பாக்கம் பெருமாள் கோவில் தெருவில் வசிப்பவர் வெங்கடேசன் (வயது 43). தனியார் தொலைக்காட்சியில் கேமரா மேனாக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மீஞ்சூரை அடுத்த வேலூர் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். திருவெள்ளைவாயல்- இலவம்பேடு சாலையில் வந்தபோது மர்ம நபர்கள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்து இடைமறித்து வெங்கடேசனை கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டினர். அவர்களிடம் பணம் தர மறுத்ததால் அவரை ஹெல்மெட்டால் தலையில் தாக்கினர்.

இதில் பலத்த காயம் அடைந்த வெங்கடேசன் நிலைதடுமாறி கீழே விழுந்தார். பிறகு அவரிடம் இருந்த விலை உயர்ந்த 2 செல்போன்கள், டிரைவிங் லைசென்ஸ் ஆகியவற்றை பறித்துக்கொண்டு மர்ம நபர்கள் 2 பேரும் தப்பி சென்றுவிட்டனர்.

படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் அலறி துடித்த வெங்கடேசனை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். பின்னர் அவரை அங்கிருந்து மேல்சிகிச்சைக் காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து சென்னை வண்ணாரப்பேட்டை போலீசார் காட்டூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதுபற்றி காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல்சென்னை பட்டாபிராம் அமுதூர் மேடை சேர்ந்தவர் ராஜன். இவரது மகன் அஜித் குமார் (வயது 23). நேற்று முன்தினம் அஜித்குமார் வேலையின் காரணமாக திருவள்ளூர் அடுத்த கோலப்பஞ்சேரியில் உள்ள ஆட்டோ நிறுத்தம் அருகில் நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் திடீரென அஜித் குமாரை கத்திமுனையில் மிரட்டி அவர் வைத்திருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச்சென்று விட்டனர். இது குறித்து அஜித்குமார் வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்