தெருவில் வீசப்பட்ட மூதாட்டியை மகன்களிடம் ஒப்படைத்த போலீசார்

ஜெயங்கொண்டம் அருகே தெருவில் வீசப்பட்ட மூதாட்டியை மகன்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

Update: 2019-10-05 23:00 GMT
ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் கிராமம் கம்பர் தெருவை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி பட்டம்மாள்(வயது 95). இவர்களுக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். 2 மகன்களுக்கும் திருமணமாகி அதே கிராமத்தில் அருகருகே வசித்து வருகின்றனர். மகள்களும் குடும்பத்தினருடன் மற்றொரு கிராமத்தில் வசித்து வருகின்றனர். ஒரு மகன் இனிப்பு கடை நடத்தி வருகிறார். மற்றொரு மகன் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மாணிக்கம் இறந்து விட்டதால் பட்டம்மாள் மட்டும் தனியாக வசித்து வருகிறார். முதுமையின் காரணமாக பட்டம்மாளுக்கு உடல்நலம் குன்றியது. இதனால், தான் பெற்ற பிள்ளைகளின் உதவியை நாடினார். ஆனால், பெற்ற தாயை மகன்கள் இருவரும் வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை. மேலும் மகன்கள் இருவரும் பெற்ற தாய் என்றும் பாராமல் பட்டம்மாளை தூக்கி வந்து தெருவில் போட்டனர். இதுகுறித்து நேற்று முன்தினம் “தினத்தந்தி” நாளிதழில் செய்தி பிரசுரிக்கப்பட்டது.

தலா 15 நாட்கள்

இதனை அறிந்த அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவின்பேரில், பட்டம்மாளின் மகன்களான சண்முகம், சதாசிவம் ஆகிய இருவரையும், ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, தலா 15 நாட்கள் ஒருவர் என பட்டம்மாளை பராமரிக்க வேண்டும் அல்லது தாயை பராமரிக்க ஒருவரை நியமித்து அவருக்கு இருவரும் சேர்ந்து சம்பளம் வழங்க வேண்டும் என அறிவுரைக்கூறி பட்டம்மாளை அவரது மகன்களிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து பட்டம்மாளுக்கு தேவையான போர்வை, சேலை, துண்டு, பாய் உள்பட ரூ.3 ஆயிரம் மதிப்பிலான பொருட்களையும் போலீசார் சார்பில் ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ், இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் வழங்கினர். இதுகுறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு கூறுகையில், இதுபோல் வயதான பெற்றோரை அனாதையாக தவிக்க விடுவது சட்டப்படி குற்றம். அப்படி விடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் செய்திகள்