தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு: போலீஸ் காவலில் சிகிச்சை பெற்று தப்பி ஓடிய வாலிபர் கைது -கொலை முயற்சி வழக்கில் தொடர்புடையவர்

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் போலீஸ் காவலில் சிகிச்சை பெற்று தப்பி ஓடிய வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2019-10-05 22:15 GMT
தூத்துக்குடி,

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பத்மநாதபுரம் ஆர்.சி. தெருவை சேர்ந்தவர் ஜான்ரோஸ். இவருடைய மகன் பிரதீஸ் (வயது 24). இவர் சாயர்புரம் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட மஞ்சள்நீர்காயல் பகுதியில் இளம்பெண் ஒருவரை காதலிப்பதாக கூறி அவருடைய தாத்தாவிடம் பெண் கேட்டுள்ளார். ஆனால், அவர் பெண் கொடுக்க மறுத்து உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பிரதீஸ், அந்த பெண்ணின் தாத்தாவை தாக்கினார். பின்னர் அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு அதே பகுதியில் மயங்கி கிடந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் சாயர்புரம் போலீசார், பிரதீஸ் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவரை போலீசார் கைது செய்ய சென்றனர். அப்போது பிரதீஸ் மதுபோதையில் மயங்கி கிடந்ததால், அவரை போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வந்து தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் போலீஸ் காவலில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடிந்த பின்னர் அவரை கைது செய்ய போலீசார் தயாராக இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் மயக்கம் தெளிந்து எழுந்த பிரதீஸ், போலீசார் தன்னை பிடித்து வைத்து இருப்பதை அறிந்தார். இதையடுத்து அவர் அருகே இருந்தவர்களிடம் கழிவறை செல்வதாக கூறி விட்டு, போலீசாரின் கண்களில் படாமல் அங்கிருந்து நைசாக தப்பி ஓடி விட்டார்.

சிறிது நேரம் கழித்து போலீசார் கழிவறைக்கு சென்று பார்த்தபோது அங்கு அவரை காணாததால் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து உடனடியாக போலீசார் மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். மேலும் பிரதீசை பிடிக்க ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவின் பேரில், சாயர்புரம் இன்ஸ்பெக்டர் பட்டாணி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் குலசேகரன்பட்டினம் கோவில் அருகே தக்கலைக்கு தப்பி செல்வதற்காக நின்ற பிரதீசை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் போலீஸ் காவலில் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் தப்பி ஓடி பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரதீஸ் ஏற்கனவே போக்சோ சட்டத்தில் கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்