திருச்சியில் மாயமான பள்ளி மாணவன் வாய்க்காலில் பிணமாக மீட்பு போலீசார் விசாரணை

திருச்சியில் மாயமான பள்ளி மாணவன் உய்யகொண்டான் வாய்க்காலில் பிணமாக மீட்கப்பட்டான். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2019-10-05 23:00 GMT
திருச்சி,

திருச்சி கருமண்டபம் ஆல்பாநகரை சேர்ந்தவர் பாபு. இவருடைய மகன் பிரவீன்குமார்(வயது 14). இவர் திருச்சி கருமண்டபத்தில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் அதிகாலை பிரவீன்குமார் வீட்டில் இருந்து பள்ளியில் என்.சி.சி. வகுப்புக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார்.

ஆனால் அதன்பிறகு மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அவரை பல்வேறு இடங்களிலும் தேடி பார்த்தனர். எங்கு தேடியும் கிடைக்காததால் இது குறித்து செசன்ஸ் கோர்ட்டு போலீஸ் நிலையத்தில் பாபு புகார் அளித்தார். அதன்பேரில் செசன்ஸ் கோர்ட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் வழக்குப்பதிவு செய்து மாயமான பள்ளி மாணவன் பிரவீன்குமாரை தேடி வந்தார்.

வாய்க்காலில் மிதந்த உடல்

இந்தநிலையில் நேற்று மாலை திருச்சி கலெக்டர் அலுவலகம் பின்புறமுள்ள உய்யகொண்டான் வாய்க்காலில் பிரவீன்குமார் உடல் மிதந்தது. இதனை கண்ட அந்த பகுதியினர் உடனடியாக செசன்ஸ் கோர்ட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். செசன்ஸ் கோர்ட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிரவீன்குமார் உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பள்ளியில் என்.சி.சி. வகுப்புக்கு சென்ற பிரவீன்குமார் வாய்க்காலில் குளிக்க சென்றபோது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பள்ளி மாணவன் வாய்க்காலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்