3 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.21¼ கோடியில் திருமண உதவி, தாலிக்கு தங்கம் - கலெக்டர் வழங்கினார்

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 3 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.21¼ கோடி மதிப்பில் திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் ஆகியவற்றை கலெக்டர் சண்முகசுந்தரம் வழங்கினார்.

Update: 2019-10-05 22:45 GMT
வேலூர், 

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று சமூகநலத்துறை சார்பில் திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அ.தி.மு.க. எம்.பி. முகம்மதுஜான், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கார்த்திகேயன், ஈஸ்வரப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமூகநல அலுவலர் முருகேஸ்வரி வரவேற்றார்.

நிகழ்ச்சிக்கு கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி, தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவி வழங்கினார். 992 பேருக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் 8 கிராம் தங்கம், 2,008 பேருக்கு ரூ.50 ஆயிரம் மற்றும் 8 கிராம் தங்கம் என மொத்தம் 3 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.21 கோடியே 26 லட்சத்து 8 ஆயிரம் மதிப்புள்ள திருமண உதவி வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கலெக்டர் சண்முகசுந்தரம் பேசியதாவது:-

இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. இந்திய அரசியல் பாரம்பரியம் மாறுபட்டதாகும். தமிழ்நாட்டில் பெரியார், காமராஜர் ஆகியோரின் எண்ணங்கள்தான் இன்று அரசு திட்டங்களாக செயல்படுத்தப்படுகின்றன. இந்த திட்டங்கள் மூலம் தமிழகம், பல்வேறு மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக உள்ளது. மத்திய அரசு கூட தமிழக திட்டங்களை பின்பற்றுகிறது.

காமராஜர் கொண்டுவந்த மதிய உணவு திட்டம் இந்தியாவிலேயே ஒரு முன்னோடி திட்டமாகும். இந்த திட்டம் பரவலாக்கப்பட்டு மத்திய அரசும் பின்பற்றுகிறது. பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை, விதவை திருமணம் போன்றவை புரட்சிகரமான திட்டங்களாகும். கல்வி, வேலை வாய்ப்பில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

தமிழக அரசின் இலவச சைக்கிள் திட்டம் மூலம் மாணவிகளின் இடைநிற்றல் முற்றிலுமாக குறைந்துவிட்டது. தாலிக்கு தங்கம் வழங்குவது மற்றொரு முன்னோடி திட்டமாகும். இந்த திட்டத்தில் ரூ.25 ஆயிரம், ரூ.50 ஆயிரம் என பிரித்து வழங்கப்படுவதற்கு காரணம் அனைவரும் பட்டதாரிகளாக வேண்டும் என்பதை ஊக்குவிப்பதற்காகத்தான்.

பெண்களின் முன்னேற்றம்தான் ஒரு நாட்டின் முன்னேற்றமாகும். பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இன்று பட்டப்படிப்பு முடித்தவர்கள் 2,008 பேருக்கும், பள்ளி படிப்பை முடித்தவர்கள் 992 பேருக்கும் திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு திருமண நிதி உதவி பெறுபவர்கள் அனைவரும் பட்டப்படிப்பு முடித்தவர்களாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்