837 பேருக்கு ரூ.42 கோடி கடன் வங்கி வாடிக்கையாளர் முகாமில் வழங்கப்பட்டது

நாகர்கோவிலில் நடந்த வங்கி வாடிக்கையாளர் சிறப்பு முகாமில் 837 பேருக்கு ரூ.42 கோடி கடன் வழங்கப்பட்டது.

Update: 2019-10-06 22:00 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் இயங்கி வரும் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் ஒருங்கிணைந்து வாடிக்கையாளர் சிறப்பு முகாமை நாகர்கோவில் பெருமாள் மண்டபத்தில் 2 நாட்கள் நடத்தியது. முகாமை கூடுதல் கலெக்டர் மெர்சி ரம்யா தொடங்கி வைத்தார். முகாமில் அனைத்து வங்கிகளும் பங்கேற்று பல்வேறு கடன் மற்றும் காப்பீடு திட்டங்களை காட்சிப்படுத்தியதோடு மட்டுமின்றி, வாடிக்கையாளர்களுக்கு கடன்களையும் வழங்கினர்.

பொதுமக்களின் வங்கி தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது. வீட்டு கடன், வாகன கடன், கல்வி கடன், விவசாயக்கடன், தொழிற்கடன், சுயஉதவி குழுக்களுக்கான கடன் என அனைத்துத்தர மக்களும் பயன்பெறும் வகையில் கடனுதவி பெறுவதற்கான ஆலோசனை அளிக்கப்பட்டது.

ரூ.42 கோடி கடன்

இந்த முகாமில் குமரி மாவட்ட திட்ட இயக்குனர் பிச்சை, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பொது மேலாளர் சந்தோஷ், மண்டல மேலாளர் பிரபாகர், நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி அதிகாரி ஷைலேஷ், இந்தியன் வங்கி துணை பொது மேலாளர் கோபி கிருஷ்ணன், ஸ்டேட் வங்கி மண்டல மேலாளர் பிரபாகர், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மண்டல மேலாளர் ஜெபானந்த் ஜூலியெஸ் மற்றும் வங்கி மேலாளர்கள் கலந்து கொண்டனர்.

முகாமில் மொத்தம் 837 பயனாளிகளுக்கு ரூ.42 கோடியே 11 லட்சம் கடன் வழங்கப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராம்குமார் செய்திருந்தார்.

மேலும் செய்திகள்