மணப்பாறையில் துணிகர சம்பவம்: தலைமை ஆசிரியை வீட்டில் 65 பவுன் நகைகள் திருட்டு

மணப்பாறையில் அரசு பள்ளி தலைமை ஆசிரியை வீட்டில் 65 பவுன் நகைகள் மற்றும் பணம் திருட்டு போனது. பாம்பு பயத்தால் பக்கத்து வீட்டில் தங்கிய நேரத்தில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர்.

Update: 2019-10-06 23:15 GMT
மணப்பாறை,

திருச்சி மாவட்டம், மணப்பாறை காட்டுப்பட்டி காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் மரியசெல்வம் (வயது 52). இவர் உசிலம்பட்டியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர், நேற்று முன்தினம் அருகில் உள்ள வீட்டிற்கு சென்று விட்டு அன்று மாலை வீடு திரும்பினார். அப்போது அவரது வீட்டின் அருகே பாம்பு ஒன்று சென்று கொண்டிருந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மரியசெல்வம் கூச்சலிடவே, அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து அந்த பாம்பை அடித்து தூக்கி வீசினர். பாம்பு வீட்டின் அருகே வந்ததால் பயத்தில் இருந்த மரிய செல்வத்திடம், வீட்டில் தனியாக இருக்க வேண்டாம். எங்கள் வீட்டிற்கு வாருங்கள் என்று அழைத்ததை அடுத்து மரியசெல்வம் வீட்டை பூட்டி விட்டு பக்கத்தில் உள்ள ஒருவர் வீட்டிற்கு சென்று தங்கினார்.

இந்நிலையில் நேற்று காலை மரியசெல்வம், வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு தனியாக கிடந்தது. கதவுகளும் திறந்து கிடந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த மரியசெல்வம், வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு துணிகள் உள்ளிட்ட பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 65 பவுன் நகைகள் மற்றும் ரூ.40 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின்பேரில், மணப்பாறை துணை போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விரல் ரேகை நிபுணர்களும் மர்ம நபர்களின் தடயங்களை பதிவு செய்தனர்.

போலீசார் விசாரணையில், அருகில் வசிக்கும் பெண் ஒருவர் மீது சந்தேகம் இருப்பதாக மரியசெல்வம் தெரிவித்தார். இந்த திருட்டு குறித்த புகாரின்பேரில், மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துணிகர சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்