பிரபல நகைக்கடை கொள்ளை வழக்கில் திருவாரூர் முருகனின் அண்ணன் மகன் கைது

திருச்சியில் பிரபல நகைக்கடையில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கில் திருவாரூர் முருகனின் அண்ணன் மகன் முரளி என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Update: 2019-10-06 23:15 GMT
திருவாரூர்,

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே லலிதா ஜூவல்லரி நகைக்கடை உள்ளது. தமிழகத்தின் பிரபல நகைக்கடைகளில் ஒன்றான இந்த கடை திருச்சியில் 3 தளங்களுடன் இயங்கி வருகிறது. கடந்த 2-ந் தேதி அதிகாலை கடையின் பின்பக்க சுவரில் துளை போட்டு உள்ளே புகுந்த மர்ம நபர்கள், ரூ.12 கோடியே 41 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்றனர். தங்கத்தின் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வரும் நிலையில் பிரபல நகைக்கடையில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முகமூடி அணிந்திருந்த கொள்ளையர்கள் கடைக்குள் நுழைந்து நகைகளை அள்ளி செல்லும் காட்சிகள் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராக்களிலும் பதிவாகி இருந்தன. கொள்ளையர்களை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. திருச்சி, கரூர், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலூர் என அனைத்து மாவட்ட போலீசாருக்கும் கொள்ளை சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு, வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.

போலீசாரின் விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் திருவாரூரை சேர்ந்த முருகன் மற்றும் அவருடைய கூட்டாளிகளுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. பிரபல கொள்ளையனான முருகன் திருச்சியில் கொள்ளையை அரங்கேற்ற சதிதிட்டம் தீட்டியதும் விசாரணையில் தெரியவந்தது.

இதனிடையே கடந்த 3-ந் தேதி இரவு திருவாரூரில் நடந்த வாகன சோதனையில் நகை கொள்ளை வழக்கில் தொடர்புடைய திருவாரூர் மடப்புரத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது32) என்பவரை போலீசார் கைது செய்து, 5 கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். அப்போது தப்பி ஓடிய முருகனின் அக்கா மகன் சுரேசை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

சுரேசின் தாயார் கனகவள்ளி, குணா, மாரியப்பன், ரவி, பார்த்திபன் ஆகியோரிடம் திருவாரூர் ஆயதப்படை பிரிவில் வைத்து திருச்சி தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின்போது மாரியப்பன் கொடுத்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார், கொள்ளை கும்பல் தலைவன் முருகனின் அண்ணன் மகன் முரளி (32) என்பவரை நேற்று காலை திருவாரூர் சீராதோப்பு பகுதியில் வைத்து கைது செய்தனர்.

அப்போது முரளியை அடையாளம் காட்டுவதற்காக மாரியப்பனையும் போலீசார் உடன் அழைத்து வந்திருந்தனர். முருகன் எங்கு இருக்கிறான்? கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் எங்கு பதுக்கி வைக்கப்பட்டுள்ளன? என்பது குறித்து முரளி உள்ளிட்டோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்