கடலில் சட்டவிரோதமாக மீன்பிடிப்பவர்களை கண்காணிக்க புதிய போலீஸ் படை பிரிவு விரைவில் தொடக்கம் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

கடலில் சட்டவிரோதமாக மீன்பிடிப்பவர்களை கண்காணிக்க புதிய போலீஸ் படைப்பிரிவு தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Update: 2019-10-08 23:45 GMT
சென்னை,

சென்னை கிண்டியில் நடந்த வன உயிரின வார நிறைவு விழாவில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். கடலில் மீன்பிடிப்பது குறைகிறது. மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரத்தில் ரூ.10 கோடி செலவில் ஒரு திட்டத்தை கொண்டு வர ஒப்பந்தம் கோரப்பட்டு உள்ளது.

ஒழுங்குமுறை சட்டத்தில் சில வரைமுறைகளும் கொண்டு வரப்பட்டுள்ளன. யார்? யார்? எவ்வளவு தூரத்தில் சென்று மீன்பிடிக்க வேண்டும் என்று அதில் உள்ளது. பாரம்பரிய மீனவர்கள் உரிமை இதன் மூலம் காக்கப்படுகிறது. விசைப்படகு வைத்திருப்பவர்கள் 8 கடல் மைல் தூரத்துக்குள் வரக்கூடாது.

அனைத்து மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், பாரம்பரிய மீனவர்களின் உரிமையையும் பாதுகாக்க வேண்டும். ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. 100 ஆண்டுகளுக்கு இன்னும் மீன்பிடிக்க முடியும். ஆனால் சிலர் சட்டவிரோதமாக சுருக்குமடி, இரட்டைமடி, ஊசி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதால் கடல் வளம் பாதிக்கப்படுவதோடு, பாரம்பரிய மீனவர்களும் பாதிக்கப்படுகிறார்கள்.

இதனை கண்காணிக்க மீன்வளத்துறையிடம் போதிய அளவு ஆட்கள் இல்லை. அதற்காக ஒரு போலீஸ் அதிகாரம் கொடுத்தால் தான், கடல் வளத்தை பாதுகாக்க முடியும் என்ற அடிப்படையில் கடல் அமலாக்க பிரிவு(மரைன் என்போர்ஸ்மென்ட் விங்க்) என்ற புதிய போலீஸ் படைப்பிரிவு விரைவில் தொடங்கப்பட உள்ளது.

இந்த பிரிவினருக்கு 5 படகுகள் வழங்கப்படும். ஒரு போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், தலைமை காவலர்கள், காவலர்கள் இந்த பிரிவில் அங்கம் வகிப்பார்கள். இவர்கள் சுருக்குமடி வலைகள் மூலம் மீன்பிடித்தல் உள்பட சட்டவிரோதமாக மீன்பிடிப்பவர்களை கண்காணித்து அதனை தடுத்து நிறுத்துவார்கள்.

இந்த திட்டம் மூலம் ஆண்டுக்கு ரூ.8½ கோடி அரசுக்கு செலவு ஆகும். இந்த திட்டம் அரசின் தீவிர பரிசீலனையில் இருக்கிறது. விரைவில் முதல்-அமைச்சரின் ஒப்புதல் பெற்று அரசாணையாக வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்