ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க உதவுவதாக நடித்து பெண்ணிடம் நூதன முறையில் ரூ.43 ஆயிரம் அபேஸ்; மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு

ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க உதவுவதாக நடித்து பெண்ணிடம் நூதன முறையில் ரூ.43 ஆயிரம் அபேஸ் செய்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2019-10-09 21:30 GMT
ஈரோடு,

ஈரோடு எஸ்.கே.சி.ரோடு மொசுவண்ணவீதியை சேர்ந்தவர் ரவீந்தரன். இவருடைய மனைவி லதா (வயது 43). இவர் பெருந்துறைரோட்டில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று ஈரோடு காந்திஜிரோட்டில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுப்பதற்காக லதா சென்றார். அப்போது ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து பணம் வெளிவரவில்லை. இதனால் ஏ.டி.எம். மையத்துக்கு வெளியில் நின்று இருந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் லதாவிடம் உதவி செய்வதாக கூறி உள்ளே சென்றார்.

லதாவின் ஏ.டி.எம். கார்டை அந்த நபர் வாங்கி பணம் எடுத்து கொடுத்துள்ளார். அதன்பின்னர் லதாவிடம் ஏ.டி.எம். கார்டை அந்த நபர் திருப்பி கொடுத்துவிட்டார். லதா வீட்டுக்கு சென்றபோது அவருடைய செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில், அவருடைய வங்கி சேமிப்பு கணக்கில் இருந்து ரூ.43 ஆயிரம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

குறுந்தகவலை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அவர், தன்னுடைய ஏ.டி.எம். கார்டை எடுத்து பார்த்தார். அப்போதுதான் அது வேறுஒருவரின் ஏ.டி.எம். கார்டு என்று தெரியவந்தது. அந்த வாலிபர் லதாவின் ஏ.டி.எம். கார்டை வைத்து கொண்டு வேறு ஒருவரின் ஏ.டி.எம். கார்டை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் லதா புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், லதாவுக்கு பணம் எடுப்பதற்காக உதவிய வாலிபர், அவரிடம் வேறு ஒருவரின் ஏ.டி.எம். கார்டை கொடுத்துவிட்டு லதாவின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி வங்கி கணக்கில் இருந்து ரூ.43 ஆயிரத்தை திருடியதும், அவர் லதாவிடம் கொடுத்த ஏ.டி.எம். கார்டு ஏற்கனவே மற்றொரு நபரிடம் இருந்து ஏமாற்றியது என்பதும் தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, நூதன முறையில் பணத்தை திருடிய மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும், ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோ பதிவுகளை வைத்து, அந்த நபர் யார்? அவர் எத்தனை பேரிடம் கைவரிசை காட்டி உள்ளார்? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்