கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 சதவீத இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் அதிகாரியிடம் விவசாயிகள் மனு

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 சதவீத இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என அதிகாரியிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

Update: 2019-10-09 23:00 GMT
தஞ்சாவூர்,

தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டு இயக்க மாநில துணைத் தலைவர் கக்கரை சுகுமாரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் சுரே‌‌ஷ்குமார் ஆகியோர் தலைமையில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். ஏற்கனவே தற்கொலை முயற்சியில் ஈடுபடுவோம் என விவசாயிகள் அறிவித்து இருந்ததால் வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு சீத்தாராமன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதனால் விவசாயிகள் அனைவரையும் போலீசார் அழைத்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது நாங்கள் போராட்டத்தில் எதுவும் ஈடுபடவில்லை எனவும், கோரிக்கை மனு மட்டுமே அளிக்கப்போவதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களை கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்ல போலீசார் அனுமதித்தனர். பின்னர் விவசாயிகள் அனைவரும் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) முத்துமீனாட்சியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

இழப்பீட்டு தொகை

அந்த மனுவில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கஜா புயலால் பல்வேறு கிராமங்கள் பாதிக்கப்பட்டன. தஞ்சை மாவட்டம் தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 15 கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு 5 சதவீதம் மட்டுமே இழப்பீட்டு தொகை கிடைத்துள்ளது.

100 சதவீத இழப்பீட்டு தொகையை அனைவருக்கும் சமமாக வழங்க வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மறு ஆய்வு செய்து இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளில் சிலருக்கு இன்னும் இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. கடந்த ஆண்டு பயிர்க் காப்பீட்டு தொகை செலுத்திய விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. பேரிழப்புக்கு ஆளான விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை மிக குறைவாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை ஏற்று கொள்ள முடியாது. எனவே விவசாயிகளுக்கு முறையாக உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும்.

மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்து மக்கள் கட்சி

இந்து மக்கள் கட்சி தமிழக மாநில இளைஞரணி செயலாளர் கார்த்திக்ராவ் தலைமையில் நிர்வாகிகள் சிலர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் அளித்த மனுவில், கட்டாய தமிழ் கல்வி சட்டம்-2006-ன்படி தமிழகத்தில் தமிழை ஒரு பாடமாக அனைவரும் படிக்க வேண்டும் என்ற சட்டத்தில் இருந்து முஸ்லிம் மாணவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டு இருப்பதை திரும்ப பெற்று தமிழகத்தில் கட்டாய தமிழ் சட்டத்தை வலிமையாக்க வேண்டும்.

இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்கள் மற்றும் மடங்களின் சொத்துக்கள், விவசாய விளை நிலங்கள், கட்டிடங்கள், காலிமனைகள் ஆகியவற்றை நீண்டகாலம் யார் அனுபவித்து வருகிறார்களோ அவர்களுக்கே பகிர்ந்து கொடுத்தல் அல்லது பெயர் மாற்றம் செய்து கொள்ளுதல் ஆகியவற்றிற்கு அனுமதி கொடுக்கும் வண்ணம் தமிழகஅரசு பிறப்பித்த அரசாணையை திரும்ப பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்