கோவையில் ஆன்லைன் நிதிநிறுவனம் நடத்தி ரூ.50 கோடி மோசடி பங்குதாரர் கைது; உரிமையாளர் தலைமறைவு

கோவையில் ஆன்லைன் நிதிநிறுவனம் நடத்தி ரூ.50 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பங்குதாரர் கைது செய்யப்பட்டார். நிறுவன உரிமையாளர் உள்பட பலர் தலைமறைவாக உள்ளனர். கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் கூறியதாவது:-

Update: 2019-10-09 22:15 GMT
கோவை,

கோவை சாய்பாபா காலனி மற்றும் துடியலூரில் ரவிக்குமார் என்பவர் ‘வி.வி. டிரேடர்ஸ்’ என்ற ஆன்லைன் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இதன் பங்குதாரராக ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த சென்ராயனூரை சேர்ந்த செல்வராஜ் இருந்தார்.

இவர்கள் இருவரும் தங்கள் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிகவட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர். ரூ.1 லட்சம் செலுத்தினால் தினமும் 2 சதவீத வட்டியுடன் 25 வாரத்துக்கு தருவதாக தெரிவித்தனர்.. இதை நம்பி துடியலூர், சாய்பாபா காலனி மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த நிறுவனத்தில் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தினர். அவர்களுக்கு முதல் 3 மாதம் வரை அதிக வட்டியுடன் ஆன்லைன் மூலம் பணம் வழங்கினர். இதனை நம்பி மேலும் ஏராளமான வாடிக்கையாளர்கள் இந்த நிறுவனத்தில் பணம் செலுத்த தொடங்கினார்கள்.

இந்த நிலையில் திடீரென அந்த நிதி நிறுவனம் மூடப்பட்டது. இதனால் பணம் கட்டியவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அவர்கள் இதுகுறித்து கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து நிதிநிறுவனத்தின் பங்குதாரரான செல்வராஜை(வயது45) கைது செய்தனர். உரிமையாளர் ரவிக்குமார் தலைமறைவாகி விட்டார்.

போலீசார் செல்வராஜிடம் விசாரித்தபோது இவர்கள் இருவரும் சேர்ந்து ரூ.50 கோடிக்கு மேல் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

கைதான செல்வராஜிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள ரவிக்குமாரை தேடி வருகிறார்கள். இந்த மோசடியில் மேலும் பலருக்கு தொடர்பு உள்ளது விசாரணையில் தெரியவந்தது.அவர்களை தேடும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

நிதி நிறுவனம் நடத்தி ரூ.50 கோடி மோசடி செய்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்