பருவமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 24 மணி நேரத்தில் நிவாரணம் கிடைக்கும் வகையில் செயலாற்ற வேண்டும்; மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பேச்சு

வடகிழக்கு பருவமழையின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு 24மணி நேரத்தில் நிவாரணம் கிடைக்கும் வகையில் செயலாற்ற வேண்டும் என்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கூறினார்.

Update: 2019-10-09 22:45 GMT
சிவகங்கை,

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவ மழையின் போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலருமான மகேசன் காசிராஜன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கண்காணிப்பு அலுவலர் மகேசன் காசிராஜன் பேசியதாவது:-

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பொதுவாக அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பெய்யும். இந்த வடகிழக்கு பருவ மழையையொட்டி அனைத்து பகுதிகளில் உள்ள தாசில்தார் அலுவலகங்களில் இயங்கும் மழை மானிகள் சரியாக நிலையில் இயங்குகிறதா என்பது குறித்து வட்டாட்சியர்கள் ஆய்வு செய்து கண்காணிக்க வேண்டும். மேலும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஆகியோர் ஒருங்கிணைந்து அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதுடன் கடந்த காலத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இதுதவிர நெடுஞ்சாலைத்துறை மழைக்காலத்தின் போது தீவிரமாக கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு சாலைகளில் ஏற்படும் பாதிப்புகளை உடனுக்குடன் சரி செய்ய வேண்டும். மேலும் சாலையில் மரங்கள் சாய்ந்தால் அதை உடனடியாக அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும்.

அதேபோல் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறையுடன் பொதுப்பணித்துறை இணைந்து மாவட்டத்தில் உள்ள கண்மாய்கள், குளங்கள் ஆகியவற்றில் உடைப்புகள் ஏற்படாத வண்ணம் கண்காணிப்பதுடன் அதில் மணல் மூடைகள் வைத்து தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இதேபோல் கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரம் இயங்கி வரும் கட்டணமில்லா தொலைபேசி 1077 எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்கள் பகுதியில் மழையால் ஏற்படும் பாதிப்பு மற்றும் தேவையான உதவிகள் குறித்து தகவல் தெரிவித்து பயனடையலாம். மேலும் மாவட்ட வழங்கல் துறை அதிக அளவு தண்ணீர் தேங்கும் பகுதிகளை முன்கூட்டியே கண்டறிந்து அந்த பகுதிகளுக்கு தேவையான உணவு பொருட்களை நியாய விலைக் கடையில் போதிய அளவு இருப்பு வைக்க வேண்டும்.

பொது சுகாதாரத்துறை மூலம் முழுமையான கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு அவ்வப்போது சிறப்பு மருத்துவ முகாம் நடத்துவதுடன் தேவையான அளவு மருந்துகளை இருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் காவல்துறை, தீயணைப்புத்துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து பாதுகாப்பு தொடர்பான பணிகளுக்கு தயார் நிலையில் இருக்க வேண்டும்.

வருவாய்த்துறை அலுவலர்கள் மழைகாலத்தில் தங்கள் பகுதியில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் 24 மணி நேரத்தில் கிடைக்கும் வகையில் செயலாற்ற வேண்டும். குறிப்பாக தமிழ்நாடு மின்வாரியத்துறை அலுவலர்கள் அவ்வப்போது கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு எவ்வித பாதிப்பும் இல்லாத வண்ணம் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் வேளாண்மைத்துறை இணை இயக்குனர் கணேசன், வருவாய் கோட்டாட்சியர்கள் செல்வகுமாரி(சிவகங்கை), சங்கர நாராயணன் (தேவகோட்டை) மற்றும் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராமபிரதீபன், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் முருகேசன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, சமூக நல அலுவலர் வசந்தா, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) விஜயநாதன், உதவி இயக்குனர்(பேரூராட்சிகள்) ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்