குந்தலாடி அரசு பள்ளியில் போதிய ஆசிரியர்களை நியமிக்கக்கோரி பெற்றோருடன் மாணவர்கள் போராட்டம்

குந்தலாடி அரசு பள்ளியில் போதிய ஆசிரியர்களை நியமிக்கக்கோரி பெற்றோருடன் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2019-10-09 22:30 GMT
பந்தலூர்,

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட குந்தலாடியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் குந்தலாடி மட்டுமின்றி வாழவயல், ஓர்கடவு, குந்தலாடி, தானிமூலா, பன்னிபுழா, கடலக்கொல்லி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இதற்கிடையில் குந்தலாடி பள்ளியில் பெரும்பாலான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மாணவர்களின் கல்வித்தரம் ஆண்டுதோறும் குறைந்து வருவதாக பெற்றோர் புகார் தெரிவித்து வருகின்றனர். இதனால் போதிய ஆசிரியர்களை பள்ளிக்கு நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் காலி பணியிடங்களில் ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.

இந்த நிலையில் தொடர் விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறந்தன. குந்தலாடி அரசு பள்ளிக்கும் மாணவர்கள் வழக்கம்போல் வந்தனர். பின்னர் பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் சிவமயம் தலைமையில் காலை 9½ மணிக்கு பெற்றோருடன் மாணவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பள்ளியில் போதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோ‌‌ஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் கல்வி மாவட்ட அலுவலர் பாரதி விவேகானந்தன், நெலாக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பரசன் மற்றும் போலீசார் நேரில் வந்து பெற்றோர்-ஆசிரியர் கழக நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது காலி பணியிடங்களில் விரைவில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கல்வி அலுவலர் உறுதி அளித்தார். இதை பெற்றோர் மற்றும் பெற்றோர்-ஆசிரியர் கழக நிர்வாகிகள் ஏற்று கொண்டனர். இதைத்தொடர்ந்து 1 மணி நேரத்துக்கு பிறகு மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்பறைக்கு சென்றனர்.

மேலும் செய்திகள்