கும்பாபிஷேகத்துக்கு வைத்த குடிலை அகற்றக்கோரி தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட முயற்சி

சின்னாளப்பட்டி அருகே கும்பாபிஷேகத்துக்கு வைத்த குடிலை அகற்றக்கோரி தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட முயன்றனர்.

Update: 2019-10-09 22:15 GMT
சின்னாளப்பட்டி,

சின்னாளப்பட்டி அருகே பெருமாள் கோவில்பட்டி உள்ளது. இங்கு கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே பிரச்சினை இருந்து வந்தது. இதன் காரணமாக கடந்த 20 ஆண்டுகளாக திருவிழா நடைபெறாமல் இருந்தது. இந்தநிலையில் கடந்த ஆண்டு நடந்த பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டது.

இதனையடுத்து அங்குள்ள காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேலும் அங்குள்ள அந்தோணியார் கோவிலிலும் திருவிழா நடத்தப்பட்டது. இந்தநிலையில் காளியம்மன் கோவில் எதிரே உள்ள இடத்தில் கருப்புசாமி குடில் அமைத்து சாமி கும்பிட ஒரு தரப்பினர் அனுமதி கேட்டபோது அதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடந்த அமைதி பேச்சுவார்த்தையில், கும்பாபிஷேகத்தின்போது மட்டும் தற்காலிகமாக கருப்புசாமி குடில் அமைத்து வழிபடலாம் என்றும், கும்பாபிஷேகம் முடிந்தவுடன் குடிலை அகற்ற வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

இந்தநிலையில் கும்பாபிஷேகம் முடிந்து ஒரு வருடம் ஆகி விட்டது. ஆனால் தற்காலிகமாக அமைக்கப்பட்ட கருப்புசாமி குடில் அகற்றப்படவில்லை. எனவே அந்த குடிலை அகற்ற வேண்டும் என்று மற்றொரு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் அந்த குடிலை அகற்ற வலியுறுத்தி 200-க்கும் மேற்பட்டோர் ஆத்தூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக புறப்பட்டு சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அம்பாத்துரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார், பெருமாள்கோவில்பட்டி கிராமத்துக்கு விரைந்தனர். பின்னர் முற்றுகையிட முயன்ற கிராம மக்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் சம்பவ இடத்துக்கு ஆத்தூர் தாசில்தார் அரவிந்தன் விரைந்தார்.

அப்போது தற்காலிகமாக அமைக்கப்பட்ட குடிலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வருவாய்த்துறை மற்றும் போலீசாரிடம் கிராம மக்கள் வலியுறுத்தினர். அதற்கு மற்றொரு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி இன்னும் ஒரு வார காலத்துக்குள் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் அரவிந்தன் உறுதி அளித்தார். இதனையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தாலுகா அலுவலகத்தை முற்றுகையிடுவதற்கு கிராம மக்கள் திரண்டு சென்ற சம்பவம் சின்னாளப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்