காஞ்சீபுரம் ரவுடி ஸ்ரீதரின் தம்பி வெட்டிக்கொலை: வேலூர் கோர்ட்டில் 5 வாலிபர்கள் சரண்

காஞ்சீபுரம் ரவுடி ஸ்ரீதரின் தம்பி கருணாகரன் கொலை வழக்கு சம்பந்தமாக 5 வாலிபர்கள் வேலூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

Update: 2019-10-09 22:45 GMT
வேலூர், 

காஞ்சீபுரத்தை அடுத்த திருப்பருத்திக்குன்றம் ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர் வெங்கடேசனின் தம்பி கருணா என்கிற கருணாகரன் (வயது 32). இவர் பிரபல ரவுடி ஸ்ரீதரின் சித்தப்பா மகன் ஆவார். கருணாகரன் காஞ்சீபுரம் வணிகர்வீதியில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.

இவருடைய பைனான்ஸ் நிறுவனத்தில் நேற்று முன்தினம் மாலை ஆயுதபூஜை கொண்டாடப்பட்டது. இந்த பூஜையில் கருணாகரனும் கலந்து கொண்டார். மாலை 6 மணியளவில் 5 மோட்டார் சைக்கிளில் 10 பேர் கொண்ட மர்மகும்பல் ஹெல்மெட் அணிந்தபடி பயங்கர ஆயுதங்களுடன் பைனான்ஸ் நிறுவனத்துக்குள் நுழைந்தனர். அங்கிருந்த கருணாகரன், விக்னேஷ் ஆகியோரை அந்த கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச்சென்றனர். இதில், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே கருணாகரன் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த விக்னேஷ் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து காஞ்சீபுரம் போலீசார் வழக்குப்பதிந்தனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு தப்பியோடிய மர்மகும்பலை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் கருணாகரன் கொலை வழக்கு சம்பந்தமாக காஞ்சீபுரம் மாவட்டம் தாமல் பகுதியை சேர்ந்த மணிமாறன் (24), விஜய் (20), துளசிராமன் (24), மணிகண்டன் (23), காந்தி (24) ஆகிய 5 பேர் வேலூர் கோர்ட்டில் (ஜே.எம்.-4) நேற்று காலை சரண் அடைந்தனர். அவர்கள் 5 பேரையும் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட்டு ஜெகன்நாதன் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து 5 பேரும் வேனில் பலத்த காவலுடன் அழைத்து செல்லப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்