சேலம் அம்மாபேட்டையில் 3 பள்ளி மாணவர்கள் திடீர் மாயம்

சேலம் அம்மாபேட்டையில் 3 பள்ளி மாணவர்கள் திடீரென மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2019-10-09 23:00 GMT
சேலம்,

சேலம் அம்மாபேட்டையில் உள்ள ஏர்வாடி ஆசாரி தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன்கள் சிவலிங்கம் (வயது 14), கோபி (13).

சிவலிங்கம் காமராஜர் நகர் காலனியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான். இவனின் தம்பி கோபி அதே பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறான். அம்மாபேட்டை புகையிலை மண்டி சின்ன முத்து உடையார் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் லோகே‌‌ஷ் (15). இவன் வையாபுரி தெருவில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறான்.

இந்தநிலையில் நேற்று சிவலிங்கம், கோபி, லோகே‌‌ஷ் ஆகியோர் படிக்கும் பள்ளிக்கு சென்றனர். பின்னர் அவர்கள் மாலையில் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் மாணவர்களின் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதைத்தொடர்ந்து மாயமான மாணவர்களை அக்கம் பக்கத்தில் தேடிபார்த்தும் கிடைக்கவில்லை.

போலீசார் விசாரணை

இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர்கள் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிரு‌‌ஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து திடீரென மாணவர்கள் மாயமானது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், மாயமான 3 மாணவர்களும் கடந்த 2 நாட்களாக சென்னைக்கு செல்ல முடிவு செய்துள்ளனர். ஆனால் 3 பேரும் வீட்டில் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு, பள்ளி செல்லாமல் எங்கேயோ? சென்றுவிட்டனர். மாணவர்கள் மாலையில் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் பள்ளிக்கு சென்று கேட்டனர். அப்போதுதான் அவர்கள் 3 பேரும் பள்ளிக்கு செல்லவில்லை என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் வீட்டில் இருந்து ரூ.4 ஆயிரம் எடுத்து சென்றுள்ளனர். இவர்கள் பற்றிய தகவல்களை தெரிவிக்குமாறு பிற மாவட்ட போலீசாருக்கு புகைப்படங்களை அனுப்பி தேடி வருகிறோம் என்றனர்.

மேலும் செய்திகள்