தேர்தல் தோல்வியை ஏற்றுக் கொண்டதாலயே ராகுல்காந்தி பிரசாரம் செய்ய வரவில்லை முதல்-மந்திரி பட்னாவிஸ் பேச்சு

எதிர்க்கட்சிகள் தேர்தல் தோல்வியை ஏற்றுக் கொண்டதாலயே ராகுல்காந்தி பிரசாரம் செய்யவரவில்லை என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.

Update: 2019-10-10 00:00 GMT
மும்பை,

மராட்டிய சட்டசபை தேர்தலையொட்டி முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பா.ஜனதா - சிவசேனா கூட்டணிக்கு பிரசாரம் செய்து வருகிறார். நேற்று துலே மாவட்டத்தில் உள்ள நெர் பகுதியில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:- எதிர்க்கட்சிகள் ஏற்கனவே தோல்வியுற்ற மனநிலையில் தான் உள்ளனர். ராகுல்காந்தி பாங்காக் சென்றிருப்பதாக நான் செய்திதாளில் படித்தேன். தேர்தலில் தோற்க போவது அவருக்கு தெரிந்து விட்டது.

எனவே அவர் இங்கு வர தயாராக இல்லை. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பிரசாரம் செய்து வருகிறார். அவரும் தனது கட்சி பாதி காலியாகி விட்டதை அறிந்து உள்ளார். தேசியவாத காங்கிரசின் மற்ற பாதியும் தேர்தலுக்கு பின் காலியாகி விடும்.

சிறப்பாக செயல்பட்டோம்

தேர்தலில் தோற்கபோவதால் அவர்கள் உலகில் உள்ள அனைத்து வாக்குறுதிகளையும் தெரிவித்து விட்டனர். மராட்டியத்தில் ஒவ்வொருவருக்கும் தாஜ்மகால் கட்டித் தருகிறோம் என்று வாக்குறுதி மட்டும் தான் அவர்கள் அளிக்கவில்லை.

எனது அரசு பெரியளவில் விவசாய கடனை தள்ளுபடி செய்தது. இதன் மூலம் 50 லட்சம் விவசாயிகள் பயனடைந்தனர். கடைசி விவசாயி பயனடையும் வரையிலும் இது தொடரும். சாலை அமைத்தல், குடிநீர் வழங்குதல், மின்சாரம், வீட்டுவசதி, சுகாதார வசதிகளை வழங்கியதில் முந்தைய அரசாங்கத்தை விட சிறப்பாக செயல்பட்டு உள்ளோம்.

அதற்காக நான் எல்லாவற்றையும் மாற்றிவிட்டேன் என்று சொல்ல மாட்டேன். ஆனால் அவர்களை விட சிறப்பான பணியை செய்து உள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்