தேவாலயத்தை நிர்வகிக்க நீதிபதி, வக்கீல் நியமனம் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

மதுரையில்உள்ள தேவாலயத்தை நிர்வகிக்க நீதிபதி, வக்கீலை நியமனம் செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-10-10 01:39 GMT
மதுரை, 

மதுரை ஜான்சி ராணி பூங்கா அருகில் புனித ஜார்ஜ் தேவாலயம் உள்ளது. மிகப்பழமையான இந்த தேவாலயத்தை நிர்வகிப்பது தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே மோதல் இருந்து வருகிறது. இதையடுத்து தேவாலயத்தை நிர்வகிப்பது தொடர்பாக மதுரை வருவாய் கோட்ட அதிகாரி கடந்த ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி ஒரு உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவுக்கு எதிராக புனித ஜார்ஜ் தேவாலயக்குழு செயலாளர் ஆர்தர் ஆசிர்வாதம், மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘வருவாய் கோட்ட அதிகாரியின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள 2-வது நிபந்தனையை ரத்து செய்ய வேண்டும். தேவாலயத்தில் பிரார்த்தனை மற்றும் மத நடவடிக்கைகள் மேற்கொள்ள தற்போதைய நிர்வாக குழுவுக்கு அனுமதி வழங்க வேண்டும்' என்று தனது மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி கோவிந்தராஜ் முன்பு விசாரணைக்கு வந்தது.

முடிவில், புனித ஜார்ஜ் தேவாலயத்தை நிர்வகிப்பதில் தற்போதைய நிர்வாகிகளுக்கும், முந்தைய நிர்வாகிகளுக்கும் இடையே பிரச்சினை உள்ளது. இதனால் அங்கு அமைதியான சூழ்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. தேவாலயம் தொடர்பாக கீழ்கோர்ட்டில் நிலுவையில் உள்ள சிவில் வழக்கில் முடிவு ஏற்படும் வரை ஆலயத்தை நிர்வகிக்க 3-ம் நபர்களை நியமிக்க இந்த கோர்ட்டு முடிவு செய்துள்ளது.

அதன்படி புனித ஜார்ஜ் தேவாலயத்தை நிர்வகிக்க ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ஸ்டான்லி டேவிட், மதுரை ஐகோர்ட்டு வக்கீல் கு.சாமிதுரை ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள். தேவாலய நிர்வாகம் சிறப்பாக நடக்க உரிய குழுவை இவர்கள் ஏற்படுத்தலாம். சிறந்த நிர்வாகத்துக்கு தேவையான ஆலோசனைகளை கூறலாம். இந்த நடவடிக்கையால் தேவாலயத்தில் அமைதி நிலவும் என இந்த கோர்ட்டு நம்புகிறது.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்