அனைவரும் மனிதநேயத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பேச்சு

அனைவரும் மனித நேயத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி தெரிவித்தார்.

Update: 2019-10-10 23:00 GMT
பெரம்பலூர்,

உலக மனநல தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் குறித்தான சட்ட விழிப்புணர்வு முகாம் துறைமங்கலத்தில் உள்ள மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக நடத்தப்படும் அன்பகம் சிறப்பு பயிற்சி மையத்தில் நேற்று நடந்தது. இதற்கு பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி (பொறுப்பு), சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான மலர்விழி தலைமை தாங்கினார். பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான வினோதா, நீதித்துறை நடுவர் கருப்பசாமி, மாவட்ட உரிமையியல் நீதிபதியும், வேப்பந்தட்டை நீதித்துறை நடுவருமான செந்தில்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரம்பலூர் மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் தலைவரும், நீதிபதியுமான கருணாநிதி சிறப்புரையாற்றினார்.

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இனிப்பு-ஆடைகள்

இதில் பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மலர்விழி மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும் புதிய ஆடைகளை வழங்கி பேசுகையில், எங்கு மனித நேயம் தவறுகிறதோ, அங்கெல்லாம் வயதான பெற்றோர்களும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் தெருவில் தூக்கி வீசப் படுகிறார்கள். அதனை நாம் கண்ணால் காணுகிறோம். இதனை தடுக்க சட்டம் உள்ளது. எனவே பெற்றோர்களையும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களையும் கவனிக்காதவர்களை குறித்து பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் புகார் தெரிவித்தால், சட்டப்படி அரசு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே நாம் அனைவரும் மனித நேயத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார். இதில் பெரம்பலூர் மாவட்ட வக்கீல்கள் சங்கத்தின் செயலாளர் சுந்தரராஜன், அட்வகேட் அசோசியேசன் சங்கத்தை சேர்ந்த திருநாவுக்கரசு, மூத்த வக்கீல் காமராஜ் உள்பட வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர். முகாமிற்கு அன்பகம் சிறப்பு பயிற்சி மையத்தின் பொறுப்பாளர் சகிலா வரவேற்றார். முடிவில் மாவட்ட சட்டப்பணிகள் அணைக்குழுவின் முதுநிலை நிர்வாக உதவியாளர் வெள்ளைச்சாமி நன்றி கூறினார். முன்னதாக எறையசமுத்திரத்தில் உள்ள வேலா கருணை இல்லத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் குறித்தான சட்ட விழிப்புணர்வு முகாம் பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மலர்விழி தலைமையில் நடந்தது. முகாமில் வந்தவர்களை வேலா கருணை இல்ல நிர்வாகி அருண்குமார் வரவேற்றார்.

மேலும் செய்திகள்