காசநோயினால் விரக்தி: மகன், மகளை கொன்று தற்கொலைக்கு முயன்றவர் கைது

காசநோயினால் விரக்தி அடைந்து தற்கொலை முடிவு எடுத்து, மகன் மற்றும் மகளை கழுத்தை நெரித்து கொலை செய்த கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-10-10 23:00 GMT
மும்பை,

மும்பை காட்கோபர் மேற்கு, ஜாக்குர்தி நகரை சேர்ந்தவர் சந்திரகாந்த் (வயது37). கார் டிரைவர். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு கவுரவி (11) என்ற மகளும், பிரதிக் (7) என்ற மகனும் இருந்தனர். சந்திரகாந்த் காசநோயினால் அவதி அடைந்து வந்தார். தொடர்ந்து சிகிச்சை பெற்றும் அவருக்கு காசநோய் தீரவில்லை. இதனால் சந்திரகாந்துக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்தநிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வழக்கம் போல மீண்டும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில், கவிதா கணவரிடம் கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

தீராத நோய், மனைவியுடன் ஏற்படும் சண்டையால் விரக்தி அடைந்த சந்திரகாந்த் வாழ்க்கையை முடித்து கொள்ள துணிந்தார். எனினும் தான் உயிரிழந்த பிறகு குழந்தைகள் கஷ்டப்படுவார்கள் என அவர் நினைத்தார். எனவே அவர் குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

இதையடுத்து அவர் 2 குழந்தைகளுடன் காரில் வெளியே சென்றார். மும்பையை தாண்டிய பிறகு அவர் தனது திட்டம் குறித்து, அண்ணணுக்கு போன் செய்து கூறினார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது அண்ணன், சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் காரில் உள்ள ஜி.பி.எஸ். மற்றும் சந்திரகாந்தின் செல்போன் சிக்னலை வைத்து அவர் ராய்காட் மற்றும் சத்தாரா மாவட்டங்களுக்கு இடையில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து சந்திரகாந்தின் காரை சத்தாரா பகுதியில் போலீசார் வழிமறித்தனர். மேலும் தற்கொலைக்கு முயன்ற சந்திரகாந்தை தடுத்து நிறுத்தினர்.

இந்தநிலையில், காரில் சோதனை நடத்திய போது, அதன் டிக்கியில் குழந்தைகள் பிரதிக், கவுரவி இருவரும் மயங்கிய நிலையில் கிடந்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் இருவரையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

டாக்டர்கள் பரிசோதனையில் குழந்தைகள் இருவரும் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரித்த போது, வரும்வழியிலேய காரில் வைத்து மகள், மகனை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டதாக சந்திரகாந்த் தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்