கரூரில் பட்டப்பகலில் துணிகரம்: ஆசிரியை வீட்டில் 15 பவுன் நகை-பணம் கொள்ளை

கரூரில் ஆசிரியை வீட்டில் பட்டப்பகலில் 15 பவுன் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-10-10 23:00 GMT
கரூர்,

கரூர் வெண்ணைமலை கலைமகள் நகர் வள்ளலார் தெருவை சேர்ந்தவர் பிரபு (வயது 34). இவர், கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கணினி பொறியாளராக (சிஸ்டம் அனலைசர்) ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி செந்தாமரை (31). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் களுக்கு ஒரு மகன் உள்ளான்.

மேலும் பிரபு வீட்டில் அவருடைய மைத்துனர் சேரலாதன் தங்கியிருந்து, அங்குள்ள ஒரு கொசுவலை நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு பிரபு, செந்தாமரை, சேரலாதன் ஆகியோர் வேலைக்கு சென்று விட்டனர். பிரபுவின் மகன் பள்ளிக்கு சென்று விட்டான்.

நகை-பணம் கொள்ளை

இந்த நிலையில் மதியம் சாப்பிடுவதற்காக சேரலாதன் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது ஆங்காங்கே பொருட்களும், பீரோவில் இருந்த துணிகளும் வெளியே சிதறி கிடந்தன. இது குறித்து பிரபுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் வீட்டிற்கு வந்து பீரோவை பார்த்த போது, அதில் இருந்த 15 பவுன் நகை, ரூ.8 ஆயிரம், வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இது குறித்து வெங்கமேடு போலீசில் பிரபு புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் சேகரிக்கப்பட்டன.

நோட்டமிட்டு கைவரிசை

இந்த சம்பவம் குறித்து வெங்கமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டே மர்ம நபர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். மேலும் பீரோவின் சாவி அந்த அறையிலேயே இருந்ததால் எளிதில் அதனை திறந்து நகை-பணத்தை அள்ளி சென்றதோடு, வீட்டு முன்பு நின்ற மோட்டார் சைக்கிளையும் எடுத்து சென்றுள்ளனர். எனவே மோட்டார் சைக்கிள் எண்ணை வைத்து கொள்ளையர்களை தேடி வருகிறோம். விரைவில் பிடித்து விடுவோம் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பொதுமக்கள் அச்சம்

வேலாயுதம்பாளையத்தில் சமீபத்தில் வீட்டில் இருந்தவர்கள் கோவிலுக்கு சென்றதை நோட்டமிட்டு 15½ பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். தற்போது வெண்ணைமலையில் பட்டப்பகலில் 15 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. தொடர் கொள்ளை சம்பவங்களால் பொதுமக்களும், வணிக நிறுவனத்தினரும் அச்சத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் மர்ம நபர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், வணிகர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்