மனைவியுடன் சேர்த்து வைக்கக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி கொத்தனார் தற்கொலை மிரட்டல்

தக்கலை அருகே, மனைவியுடன் சேர்த்து வைக்கக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி கொத்தனார் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2019-10-10 23:00 GMT
பத்மநாபபுரம்,

குமரி மாவட்டம் கருங்கல் அருகே கொழிஞ்சிக்காவிளையை சேர்ந்தவர் டார்வின்ராஜ் (வயது 46). கொத்தனார் இவருக்கு திருமணமாகி 12 வருடம் ஆகிறது. டார்வின்ராஜிக்கு மதுபழக்கம் இருந்ததாக தெரிகிறது.

இதுதொடர்பாக டார்வின்ராஜிக்கும், அவருடைய மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் டார்வின்ராஜ் மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

தற்கொலை மிரட்டல்

இந்தநிலையில் டார்வின்ராஜ் நேற்று மாலை தக்கலை அருகே எட்டணியில் உள்ள ஒரு செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

இதனை பார்த்த பொதுமக்கள் அங்கு திரண்டனர். செல்போன் கோபுரத்தை விட்டு கீழே இறங்கி வருமாறு அவர்கள் வற்புறுத்தியும், அவர் இறங்கி வர மறுத்து விட்டார்.

என்னுடைய மனைவி பிரிந்து சென்று விட்டார், அவரை என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று தெரிவித்தபடி இருந்தார். இதற்கிடையே அங்கு வந்த தக்கலை போலீசார் டார்வின்ராஜிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அவர் மசியவில்லை.

பரபரப்பு

பின்னர் குழித்துறை தீயணைப்பு வீரர்கள் செல்போன் கோபுரத்தில் ஏறி அவரிடம் நைசாக பேச்சு கொடுத்தனர். அந்த சமயத்தில் திடீரென அவரை பிடித்து கயிறால் கட்டி கீழே கொண்டு வந்தனர். மனைவியுடன் சேர்த்து வைக்கக்கோரி கொத்தனார் நடத்திய போராட்டத்தால் அந்த பகுதி சுமார் 2 மணி நேரம் பரபரப்புடன் காட்சி அளித்தது.

தொடர்ந்து சிகிச்சைக்காக அவர் தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்