சிறு, குறு நிறுவனங்கள் தொழில் பழகுநர் சேர்க்கையை மேற்கொள்ள வேண்டும் - கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறு, குறு நிறுவனங்கள் தொழில் பழகுநர் சேர்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2019-10-10 22:15 GMT
தூத்துக்குடி, 

மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் சார்பில் தொழில் பழகுநர் பயிற்சி திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, தொழில் பழகுநர்(அப்ரண்டீஸ்) சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து சிறு, குறு மற்றும் பெரும தொழில் நிறுவனங்கள், உணவகங்கள், ஆஸ்பத்திரிகள், ஜவுளிக்கடை உள்ளிட்ட நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்தை தொழில் பழகுநர் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். தகுதி உள்ள பயிற்சியாளர்களை தொழில் பழகுநர்களாக சேர்க்கை செய்து 100 சதவீதம் முழுமையாக தொழில் பழகுநர் சேர்க்கையை மேற்கொள்ள வேண்டும்.

தொழில் பழகுநர் சட்டத்தின்படி 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை கொண்ட நிறுவனங்கள் தொழில் பழகுநர் திட்டத்தின் கீழ் பயிற்சியாளர்களுக்கு தொழில் பழகுநர் பயிற்சி அளிப்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. தொழில் பழகுநர் சட்டத்தின் கீழ் பதிவு செய்யாத நிறுவனங்கள் மீது தொழில் பழகுநர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குனர் ஏஞ்சல் விஜய நிர்மலாவை 0461-2340041 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்