திருவண்ணாமலையில் நடமாடும் உணவு பகுப்பாய்வக வாகனம் - கலெக்டர் தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலையில் நடமாடும் உணவு பகுப்பாய்வக வாகனத்தை கலெக்டர் கந்தசாமி தொடங்கி வைத்தார்.

Update: 2019-10-10 22:30 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் சார்பில் நடமாடும் உணவு பகுப்பாய்வக வாகனத்தை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கந்தசாமி தொடங்கி வைத்தார்.

இந்த வாகனம் மாவட்டம் முழுவதும் பயணம் மேற்கொண்டு பொதுமக்கள், வணிகர்கள், உணவக உரிமையாளர்கள் தாங்கள் பயன்படுத்தும் மளிகை பொருட்களான பால், உப்பு, சர்க்கரை, தேன், பருப்பு, மஞ்சள், மிளகு, மிளகாய் தூள், பச்சை பட்டாணி, சமையல் எண்ணெய் போன்ற உணவு பொருட்களை அளித்து அதில் கலப்படம் உள்ளதா? என அறிந்து கொள்ளலாம்.

மேலும் செயல்முறை மூலம் தங்கள் இல்லங்களிலேயே உணவு பொருட்களை பரிசோதனை செய்யும் வகையில் விளக்கம் அளிக்கப்படும். பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி உணவு பொருட்களை பரிசோதனை செய்து கொள்ளலாம்.

நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் செந்தில்குமார், நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் கைலே‌‌ஷ்குமார், வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சுப்பிரமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக கலெக்டருக்கு அதிகாரிகள் உணவு பொருட்களில் கலப்படம் குறித்து வாகனத்திலேயே செயல் விளக்கம் அளித்தனர். கலெக்டரும் உணவு பொருட்களில் கலப்படம் குறித்து பரிசோதனை செய்து கொண்டார்.

மேலும் செய்திகள்