மக்காச்சோளத்தில் படைப்புழுவை கட்டுப்படுத்த இலவச மருந்து அதிகாரிகள் தகவல்

மக்காச்சோளத்தில் படைப்புழுவை கட்டுப்படுத்த இலவச மருந்து வழங்கப்பட உள்ளதாக வேளாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Update: 2019-10-10 22:45 GMT
பேரையூர்,

டி.கல்லுப்பட்டி,சேடபட்டி ஆகிய ஒன்றியங்களில் கடந்த ஆகஸ்டு மாதம் 20-ந் தேதி முதல் செப்டம்பர் முதல் வாரம் வரை பெய்த மழையால் இப்பகுதி விவசாயிகள் தங்கள் நிலங்களில் மானாவாரியாக மக்காச்சோளம் சாகுபடி செய்தனர். 25ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோள பயிர் தொடர்ந்து பெய்த மழையால் நன்றாக முளைப்பு திறனுடன் வளர்ந்தது. ஆனால் செடிகளின் குருத்துகளில் வழக்கம்போல் படைப்புழுக்கள் தாக்குதல் ஏற்பட்டது. இதனால் இப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்தள்ளனர்.

இதுகுறித்து டி.கல்லுப்பட்டி வேளாண்மை உதவி இயக்குனர் மணிமாறன், சேடபட்டி வேளாண்மை உதவி இயக்குனர் சந்திரசேகரன் ஆகியோர் கூறியதாவது:-மக்காச் சோளம் பயிரில் தற்போது பல இடங்களில் படைப்புழுக்கள் தாக்குதல் ஏற்பட்டு உள்ளது. இதற்கு இயற்கை முறையில் மருந்து தெளிக்க வேண்டும். ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள வேம்பு சார்ந்த மருந்துகள், மெட்டாரைசியம் மற்றும் ரசாயன மருந்துகள், உரம் வேளாண்மை துறை மூலம் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

மருந்து தெளிப்பு செலவு

மேலும் மருந்து தெளிப்பு செலவு ரூ.ஆயிரம் வழங்கப்பட அரசு ஆணை வெளியிட்டு உள்ளது.இதனை கிராம கமிட்டி மூலம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கமிட்டியில் வேளாண்மை உதவி அலுவலர், அட்மா பணியாளர், விவசாய ஆர்வலர் குழு உறுப்பினர், முன்னோடி விவசாயி ஆகியோர் இடம் பெற்று இருப்பார்கள். கிராம கமிட்டி குழு மூலம் விவசாயிகளுக்கு மருந்து தொகுப்புகள் வழங்கப்படும். மருந்து தெளிப்பு செலவு விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். மக்காச்சோளம் பயிரிட்ட சிறிய மற்றும் பெரிய விவசாயிகள் அனைவருக்கும் இந்த திட்டம் பொருந்தும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்