கூடலூரில் ஏ.டி.எம். மையங்களில் பணத் தட்டுப்பாடு; கிராம மக்கள் அவதி

கூடலூரில் ஏ.டி.எம். மையங்களில் பணத் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் கிராமப்புற மக்கள் பணம் எடுக்க முடியாமல் கடும் அவதி அடைந்து உள்ளனர்.

Update: 2019-10-11 23:00 GMT
கூடலூர்,

கர்நாடகா- கேரளா மற்றும் தமிழகம் என 3 மாநிலங்கள் இணையும் பகுதியில் கூடலூர் நகரம் அமைந்துள்ளது. இதனால் அண்டை மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கூடலூர் வழியாக ஊட்டி உள்பட பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படுகிறது. கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியான தொரப்பள்ளி, புத்தூர்வயல் மற்றும் ஸ்ரீமதுரை, முதுமலை, ஓவேலி, கோழிப்பாலம், மரப்பாலம், நாடுகாணி கிராமங்கள் உள்ளது. இதில் கூடலூர் நகரில் மட்டுமே சுமார் 10 வங்கிகள் உள்ளது. இதனால் பணம் எடுப்பதற்கு ஏராளமான கிராம மக்கள் கூடலூருக்கு வருகிறார்கள். குறிப்பாக அத்தியாவசிய பொருட்களை வாங்க தினமும் ஏராளமான மக்கள் கூடலூருக்கு வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக வங்கிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது.

ஆயுதபூஜை,விஜயதசமி யொட்டி வங்கிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் வரத்தும் அதிகமாக இருந்தது. மேலும் கிராமப்புறங்களில் இருந்து வரும் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க பணம் தேவைக்காக ஏ.டி.எம்.மையங்களுக்கு வந்தனர். ஆனால் பணம் இல்லாததால் ஏமாற்றம் அடைவதோடு கடும் அவதி அடைந்து வருகிறார்கள். தொடர் விடுமுறை முடிந்ததும் வங்கிகள் செயல்பட்டாலும் ஏ.டி.எம்.களில் உடனுக்குடன் பணம் இருப்பு வைக்கப்படுவது இல்லை என பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கிராமமக்கள் கூறுகையில், தோட்ட தொழிலாளர்கள் சம்பளம் உள்பட அனைத்து தொகைகளும் தற்போது வங்கிகளில் போடப் படுகிறது. இதனால் கூடலூருக்கு வந்து ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுத்து அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்கின்றோம். ஆனால் கடந்த சில வாரங்களாக ஏ.டி.எம்.மையங்கள் சரிவர பராமரிக்கப்படுவது இல்லை. பணம் வைப்பு எந்திரங்கள் பழுதடைந்து கிடக்கிறது. இதனை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.

மேலும் பணம் எடுக்கும் எந்திரங்களிலும் இருப்பு வைக்கப்படுவது இல்லை. இதனால் அவசர நேரத்தில் பணம் கிடைக்காமல் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறோம் என்றனர்.

மேலும் செய்திகள்