மானாமதுரை அருகே 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் சித்ரவதை; மாணவர்கள் உள்பட 4 பேர் கைது

மானாமதுரை அருகே 9-ம் வகுப்பு மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 2 கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2019-10-12 00:00 GMT
மானாமதுரை,

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு பயிலும் ஒரு மாணவிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த விஷ்வா (வயது 29) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த மாணவியுடன் விஷ்வா தனது செல்போனில் நெருக்கமாக புகைப்படங்களை எடுத்துள்ளார்.

இந்த புகைப்படங்களை விஷ்வா தனது நண்பர்களான முத்துராமலிங்கம் மகன் கவியரசன்(22), அய்யங்காளை மகன் அருண்பாண்டி (21), மற்றும் பாண்டி மகன் ஆகாஷ் (19) ஆகிய 3 பேரின் செல்போனிற்கு அனுப்பி உள்ளார்.

இதையடுத்து இந்த படங்களை கவியரசன், அருண்பாண்டி, ஆகாஷ் ஆகிய 3 பேரும் அந்த மாணவியிடம் காண்பித்து அவரை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது குறித்து அந்த மாணவி தனது தாயாரிடம் கூறி அழுதுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவியின் தாயார் மானாமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சம்பத்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சரவண போஸ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அருண்பாண்டி, கவியரசன் ஆகிய 2 பேரை நேற்று முன் தினம் இரவு கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்ட விஷ்வா மற்றும் அவரது நண்பர் ஆகாஷ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆகாஷ், அருண்பாண்டி ஆகியோர் கல்லூரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் குறித்து மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் விஷ்வா மற்றும் அவரது நண்பர்கள் மீது போக்சோ, ஏமாற்றுதல், மிரட்டல் விடுத்தல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாணவி சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இன்றைய கால கட்டத்தில் பெற்றோர் தங்களது பெண் குழந்தைகளை மிகவும் கவனத்துடன் வளர்க்க வேண்டும்.

இதுதவிர, பள்ளி மாணவ-மாணவிகளிடம் பெற்றோர் தங்களது அந்தஸ்தை காட்டும் வகையில் அவர்களிடம் செல்போன் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப சாதனங்களை கொடுக்கக் கூடாது. மேலும் கல்வி சம்பந்தமாக மட்டும் தான் அந்த சாதனங்களை மாணவ-மாணவிகளிடம் கொடுக்கலாம். இன்றைய சூழ்நிலையில் சமூக வலைத்தளங்களால் மாணவ-மாணவிகளின் எதிர்காலம் பாழாகி வருகிறது. எனவே பெற்றோர் தங்களது குழந்தைகளை மிகவும் கண்காணித்து அவர்களுக்கு நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக்கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்