விவசாய மின் இணைப்பில் பெயர் மாற்ற லஞ்சம்: உதவி பொறியாளர் உள்பட 2 பேர் கைது

விவசாய மின் இணைப்பில் பெயர் மாற்ற விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளர் உள்பட 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-10-11 22:45 GMT
பென்னாகரம்,

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள எச்சனஅள்ளி பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 42), விவசாயி. இவர் தனது தாயார் பெயரில் உள்ள விவசாய மின் இணைப்பை தனது பெயருக்கு மாற்றி தரக்கோரி பென்னாகரம் மின்வாரிய அலுவலகத்தில் மனு அளித்திருந்தார். மின்வாரிய அலுவலர்கள் பெயரை மாற்றி தராமல் கடந்த ஒரு வருடமாக காலம் தாழ்த்தி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்ற நாகராஜ், உதவி பொறியாளர் ரவி, வருவாய் மேற்பார்வையாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோரிடம் மின் இணைப்பில் பெயர் மாற்றுவது தொடர்பாக கேட்டுள்ளார். அப்போது ரூ.1,500 கொடுத்தால் பெயர் மாற்றித் தருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத நாகராஜ் இதுகுறித்து தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை நாகராஜிடம் வழங்கி மின்வாரிய அதிகாரிகளிடம் கொடுக்க கூறினர். அவர்களின் ஆலோசனை படி நாகராஜ் பென்னாகரம் மின்வாரிய அலுவலகத்திற்கு நேற்று பணத்துடன் சென்றார். அவருடன், லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் பென்னாகரம் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று மறைந்து இருந்தனர்.

அலுவலகத்திற்கு சென்ற நாகராஜ், மின்வாரிய உதவி பொறியாளர் ரவி (54), வருவாய் மேற்பார்வையாளர் தமிழ்ச்செல்வன் (56) ஆகியோரிடம் ரசாயன பவுடர் தடவிய ரூ.1,500-ஐ கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் மின்வாரிய உதவி பொறியாளர் ரவி மற்றும் வருவாய் மேற்பார்வையாளர் தமிழ்ச்செல்வன் ஆகிய 2 பேரையும் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

மேலும் செய்திகள்