மாமல்லபுரம் வந்த காதல் ஜோடிகளை தடுத்து நிறுத்திய போலீசார்

மாமல்லபுரம் வந்த காதல் ஜோடிகளை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினார்கள்.

Update: 2019-10-11 22:15 GMT
மாமல்லபுரம்,

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் வருகையால் மாமல்லபுரம் திருவிழாக்கோலம் பூண்டது. நுழைவுவாயில் பகுதியான மாமல்லன் சிலை, ஐந்துரதம், கடற்கரை கோவில், அர்ச்சுனன் தபசு உள்பட 7 இடங்களில் தலைவர்களை வரவேற்பதற்காக 30 வகை பழங்கள், காய்கறிகள், ரோஜா மலர்கள் கொண்டு அழகிய தோரண வாயில் அமைக்கப்பட்டிருந்தது. கடற்கரை கோவில், ஐந்துரதம் முகப்பில் இந்தியா-சீனா நாட்டு தேசிய கொடிகள் பறக்க விடப்பட்டிருந்தன.

மாமல்லபுரம் நகர்ப்பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ளது. நகரில் மட்டும் சுமார் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போலீசார் அங்குள்ள 10 பள்ளிகளில் தங்கி இருப்பதால் அந்த பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டிருந்தது. சுற்றுலா பயணிகள் வராததால் பெரும்பாலான விடுதிகளிலும் போலீசார் தங்கி உள்ளனர்.

அனைத்து சாலைகளிலும் சோதனை சாவடி அமைத்து போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். ஆதார் அடையாள அட்டையை காண்பித்த பிறகே உள்ளூர் மக்கள் மற்ற இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். நகருக்குள் எந்தவித வாகனங்களும் அனுமதிக்கப்படவில்லை. அங்கு வந்த காதல் ஜோடிகள் பலரை நகருக்குள் செல்லவிடாமல் போலீசார் தடுத்து நிறுத்தி அனுப்பி வைத்தனர்.

வெண்ணை உருண்டை கல், கடற்கரை கோயில், ஐந்துரதம் ஆகிய இடங்களில் வேலைக்கு சென்ற தொல்லியல் துறை பணியாளர்கள் ‘மெட்டல் டிடெக்டர்’ மூலம் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சிறப்பு அடையாள அட்டை வழங்கப்பட்டிருந்தது.

பாதுகாப்பு காரணமாக மாமல்லபுரம், கொக்கிலமேடு உள்பட சுற்றுவட்டார பல்வேறு கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

கலங்கரை விளக்கத்திற்கு செல்ல பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை.

மேலும் செய்திகள்