விதிகளை மீறி லாரி குடோன் நடத்துவோர் மீது நடவடிக்கை; உதவி கலெக்டர் எச்சரிக்கை

விதிமுறைகளை மீறி லாரி குடோன் நடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உதவி கலெக்டர் எச்சரித்துள்ளார்.

Update: 2019-10-12 22:15 GMT
சிவகாசி,

சிவகாசியில் பல இடங்களில் அனுமதி பெறாமல் குடோன் அமைத்து பட்டாசு பெட்டிகளை பதுக்கி வைத்து வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இதுபோன்ற விதிமீறல்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் அனுமதியின்றி செயல்படும் லாரி குடோன்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டது.

ஆனால் விதிமுறைகளை பின்பற்ற தவறிய பலர் அனுமதியின்றி லாரி குடோன்களை நடத்தி வருகிறார்கள். இதனால் அந்த பகுதியை கடந்து செல்ல பொதுமக்கள் அச்சப்படும் நிலை தொடர்கிறது.

இதற்கிடையில் சிவகாசிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட உதவி கலெக்டர் தினேஷ்குமார் நாரணாபுரம் பகுதியில் அலுவல் பணி காரணமாக சென்ற போது விதிமீறல்கள் தெரியவந்தது. இதை தொடர்ந்து நேற்று காலை உதவி கலெக்டர் அலுவலகத்தில் பட்டாசு குடோன் அதிபர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் 50-க்கும் குறைவானவர்களே கலந்து கொண்டனர். அதில் சிலர் தங்கள் கருத்துகளையும், கோரிக்கைகளையும் உதவி கலெக்டரிடம் தெரிவித்தனர்.

கூட்டத்தில் உதவி கலெக்டர் தினேஷ்குமார் பேசும் போது, லாரி குடோன்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்தப்பட வேண்டும். விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

மேலும் செய்திகள்