நலத்திட்டங்களை நிறைவேற்றாவிட்டால் கவர்னர் கிரண்பெடிக்கு ஏனாம் மக்கள் பாடம் கற்பிப்பார்கள் - அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் ஆவேசம்

ஏனாம் மக்களுக்கான நலத்திட்டங்களை நிறைவேற்றாவிட்டால் கவர்னர் கிரண்பெடிக்கு மக்கள் பாடம் கற்பிப்பார்கள் என்று அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் கூறினார்.

Update: 2019-10-12 23:00 GMT
புதுச்சேரி,

புதுவை சுகாதாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் நேற்று காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஏனாம் தொகுதி பிரச்சினைகள் தொடர்பாக கவர்னர் கிரண்பெடியை சந்திக்க நேரம் கேட்டிருந்தேன். ஆனால் நேரம் கொடுக்கவில்லை. அவருக்கு உடல்நலம் சரியில்லை எனவும், கோரிக்கைகளை கடிதமாக கொடுக்குமாறும் கவர்னரின் சிறப்பு பணி அதிகாரி கேட்டார். அதன்படி 20 பக்க கடிதத்தை எனது தனிச்செயலாளர் மூலம் கொடுத்து அனுப்பினேன்.

கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் 8-ந்தேதி கவர்னர் ஏனாமுக்கு வந்தார். அப்போது அங்குள்ள பிரச்சினைகள் குறித்து கடிதம் கொடுத்தேன். ஆனால் இதுவரை ஒரு பிரச்சினையைக்கூட தீர்க்கவில்லை. ஏனாம் மக்களுக்கு இலவச அரிசி வழங்க கேட்டோம். அங்கு வழங்கப்படும் இலவச அரிசி தரமில்லை என்று ஒரு புகார் கூட வந்தது கிடையாது. மேலும் அங்குள்ள மக்களுக்கு பச்சரிசிதான் வழங்கப்படுகிறது. அதற்கு தனியாகத்தான் டெண்டரும் விடப்படுகிறது.

கிராமப்புறங்களில் உள்ள மக்கள் நகரப்பகுதியில் உள்ள வங்கிக்கு வரவேண்டும் என்றால் ஆட்டோவில்தான் வரவேண்டும். அதற்கே ரூ.200 செலவாகிவிடும். ரேஷன்கடை ஊழியர்களுக்கும் 7 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை. ஏனாமில் கூட்டுறவு மதுபான கடைகள்தான் உள்ளன. அதற்கு புதுவையிலிருந்து மதுபானங்களை எடுத்து செல்ல ஆந்திர அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கான கட்டண சலுகையையும் அளித்துள்ளது. ஆனால் அதற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை.

அதேபோல் குஜராத் பெட்ரோலியம் நிறுவனம் பைப் லைன் பதிக்கும்போது மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டது. இதற்காக மீனவர்களுக்கான நிவாரணத்தொகையாக ரூ.19 கோடி வழங்கியது. இதில் ரூ.9 கோடி மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.10 கோடியை மீனவர்களுக்கு வழங்க கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை.

ஏனாம் மக்களின் தேவைகள் தொடர்பாக 20 பக்க கடிதம் கவர்னருக்கு கடிதம் கொடுத்துள்ளேன். இந்தநிலையில் கவர்னர் கிரண்பெடி ஏனாம் வர திட்டமிட்டுள்ளதாக அறிகிறேன். எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றிவிட்டு வந்தால் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுப்பேன். இல்லையெனில் ஏனாம் மக்கள் அவருக்கு பாடம் கற்பிப்பார்கள்.

எதையெடுத்தாலும் முறைகேடு என்று கவர்னர் கூறுகிறார். நான் மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்ற பல கோடிக்கு ஒப்புதல் பெற்று வந்தேன். ஆனால் அவற்றை நிறைவேற்ற கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை. ஏனாம் வெள்ள தடுப்பு சுவர் ரூ.139 கோடியில் கட்ட ஒப்புதல் அளித்த மத்திய அரசு ரூ.52 கோடியை முதல்கட்டமாக ஒதுக்கியுள்ளது. ஆனால் அதை செயல்படுத்தக்கூடாது என்று கவர்னர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சென்டாக் முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. வழக்கில் என்னையும் சேர்க்க கவர்னர் முயற்சித்தார். நான் எதிலும் தப்பு செய்தால் என்மீது நடவடிக்கை எடுக்கலாம். அதிகாரிகள் எனது பேச்சை கேட்டால் சி.பி.ஐ. மூலம் நடவடிக்கை எடுப்பேன் என்று அவர்களை மிரட்டுகிறார். இவ்வாறு அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் கூறினார்.

மேலும் செய்திகள்