ஈரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் 9½ பவுன் நகை பறிப்பு

ஈரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் 9½ பவுன் நகையை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2019-10-12 22:15 GMT
ஈரோடு,

ஈரோடு கருங்கல்பாளையம் அழகரசன் நகர் பகுதியை சேர்ந்தவர் மீன்ராஜா. இவர் அந்த பகுதியில் கடை வைத்து பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஈஸ்வரி (வயது 35).

இந்த நிலையில் நேற்று மாலை பால் வாங்குவதற்காக ஈஸ்வரி அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்றார். பின்னர் கடையில் பால் வாங்கிவிட்டு அங்கிருந்து நடந்து வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார்.

அப்போது அவருக்கு பின்னால் ஹெல்மெட் அணிந்தபடி 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தனர். ஈஸ்வரி அருகில் வந்ததும் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்தவன் அவரது கழுத்தில் கிடந்த 9½ பவுன் நகையை வெடுக்கென பறித்தான். இதனால் அவர் திருடன், திருடன் என கூச்சலிட்டார்.

அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் மர்ம நபர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச்சென்று விட்டனர்.

அதைத்தொடர்ந்து ஈஸ்வரி இதுபற்றி ஈரோடு கருங்கல்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளையும் போலீசார் பார்வையிட்டு வருகிறார்கள். நடந்து சென்ற பெண்ணிடம் 9½ பவுன் நகையை பறித்துச்சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்