பணிச்சுமை அதிகமாக இருப்பதாக கூறி வருவாய் ஆய்வாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்

பணி்ச்சுமை அதிகமாக இருப்பதாக்கூறி வருவாய் ஆய்வாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு பேராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-10-12 22:45 GMT
திருப்பூர்,

திருப்பூர் மாவட்டத்தில் பணியாற்றக்கூடிய வருவாய் ஆய்வாளர்கள் அதிக பணிச்சுமையால் அவதிப்படுவதாகக் கூறி, நேற்று மாலை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வருவாய் அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் அந்த பகுதிக்கு வருவாய் அதிகாரி சுகுமார் வந்தார். தொடர்ந்து அவரிடம் ஒரு மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் மாவட்டம் முழுவதும் 33 வருவாய் அலுவலர்கள் உள்ளோம். நாங்கள்வாரம்முழுவதும் பணியாற்றக்கூடிய சூழல் நிலவுகிறது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகிறோம். மேலும் வாரத்தின் 7 நாட்களும் களப்பணியாற்றும் சூழல் உள்ளது.

ஆகவே எங்களுக்கு அலுவலகப்பணி வழங்கும்பொருட்டு வருவாய் அலுவலரை சந்தித்து முறையிட்டோம். மேலும் எங்கள் கோரிக்கையை மனுவாக அளிக்க முயற்சித்தோம். கிராம உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர், துணை தாசில்தார் டேட்டா என்ட்ரீ ஆபரேட்டர் என பல்வேறு பணிகளை இரவு-பகல் பார்க்காமல் செய்து வருகிறோம்.

இதனால் குடும்பத்துடன் நேரம் செலவு செய்ய முடியவில்லை. மேலும், குழந்தைகளை கவனிக்க முடியவில்லை. அளவு கடந்த பணிச்சுமையால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளோம்.

பணிச்சுமையை குறைக்க வேண்டும். இல்லையென்றால் வருவாய் ஆய்வாளர் பணியில் இருந்து விடுவித்து அலுவலக பணி வழங்க வேண்டும். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

இதனைத்தொடர்ந்து வருவாய் ஆய்வாளர்களிடம், வருவாய் அதிகாரி சுகுமார் பேச்சுவார்த்தை நடத்தினார். பணிச்சுமையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து அவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்